தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் துணிப்பை இயக்கத்தை தொடங்கிய திமுக!

புதுச்சேரியில் நெகிழிப்பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்தும் இயக்கத்தை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா துவக்கி வைத்து, சுமார் 500 க்கும் மேற்பட்டோருக்கு துணிப் பைகளை வழங்கினார்.
தமிழகத்தில் நெகிழிப்பைகளின் பயன்பாட்டை தவிர்த்து, அதற்கு மாற்றாக துணிப்பைகளை உபயோகிக்கும் பழக்கத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்த ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரி மாநிலத்திலும் நெகிழிப்பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளை பயன்படுத்துமாறு மக்களை வலியுறுத்தும் வகையில், பொதுமக்களுக்கு இலவசமாக துணிப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான இரா.சிவா கலந்துகொண்டு சுமார் 500 க்கும் மேற்பட்டோருக்கு துணிப் பைகள் மற்றும் பாராம்பரிய இனிப்புகளை வழங்கினார்.
இதேபோல் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் 10 ஆயிரம் துணிப் பைகள் வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், வடிவேல், முன்னாள் கவுன்சிலர் சக்திவேல், மாரிசாமி பத்திரிசியா, ரெஜிஸ், இளங்கோ, ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.