இரு மாதங்களுக்குள் 21ஐ நிறைவேற்றத் தீர்மானம்.
ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் கொண்டுவரப்படவுள்ள அரசமைப்பின் 21 ஆவது திருத்தத்தை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து 19 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை கொண்டதாக 21 ஆவது அரசமைப்பு திருத்தத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த புதன்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியிருந்தார்.
இதன்படி தற்போது புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக அமைச்சரவை அமைக்கப்பட்ட பின்னர் அரசமைப்பு திருத்தம் தொடர்பான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஜனாதிபதி இது தொடர்பில் உறுதியளித்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
புதிய அரசமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.