ராஜபக்சக்களைக் காப்பாற்றுவது எனது நோக்கம் அல்ல * மக்களின் வயிற்றுப்பசிக்கு உடன் தீர்வு காண்பதே இலக்கு.
அலரி மாளிகையில் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் முழங்கினார் ரணில்.
“முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்சக்களைக் காப்பாற்றவே நான் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கருத்துக்களை வெளியிடுகின்றனர். ராஜபக்சக்களைக் காப்பாற்றுவது எனது நோக்கம் அல்ல என்பதை குறித்த எம்.பிக்களிடம் கூறிவைக்க விரும்புகின்றேன்.”
– இவ்வாறு புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
“பாரிய பொருளாதார நெருக்கடிகளால் நாட்டு மக்கள் மூன்று வேளைகளிலும் உணவை உட்கொள்ள முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் வயிற்றுப் பசிக்கு உடனடியாகத் தீர்வு காண்பதே எனது குறிக்கோள்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் நேற்று மாலை பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கவே பிரதமர் பொறுப்பை ஏற்றேன். அதற்காக அனைத்துக் கட்சிகளினதும் ஒத்துழைப்பையும் ஆதரவையும் நான் எதிர்பார்க்கின்றேன்.
இலங்கைக்கு வெளிநாடுகள் உதவ முன்வந்துள்ளன. எனவே, பொருளாதார நெருக்கடிக்கு நாம் விரைந்து தீர்வுகாண முடியும். துயரங்களிலிருந்து மக்களை மீட்டெடுக்க முடியும்.
உண்மையான மக்கள் பிரதிநிதிகள் எனது வேலைத்திட்டங்களுக்கு ஆதரவை வழங்க வேண்டும்” – என்றார்.