வடகொரியாவில் அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை.
வடகொரியாவில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் 21 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உலக நாடுகள் பல கொரோனா பெருந்தொற்றில் இருந்து படிப்படியாக மீண்டு வருவதுடன், குறிப்பிட்ட சில நாடுகள் கொரோனா தொற்றுடன் தற்போதும் போராடி வருகிறது.
அந்தவகையில், இதுவரை கொரோனா பாதிப்பே ஏற்படவில்லை என அறிவித்துவந்த வடகொரியாவில் வெள்ளிக்கிழமை மட்டும் 174,440 பேர்களுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள வடகொரியாவில், கண்டிப்பாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அரசு தரப்பு வெளியிட்டுள்ள தகவலில், சனிக்கிழமை வரையில் மொத்தம் 27 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளதாகவும், இதுவரை 524,440 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், 243,630 பேர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் 280,810 பேர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
2019 முதல் உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் கடும் பாதிப்பை எதிர்கொண்ட நிலையிலும், தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லை என்றே வடகொரியா கூறிவந்துள்ளது.
இதனிடையே, உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், கொரோனா பரவல் என்பது வரலாற்றின் மிகப்பெரிய பெரிய இடையூறு எனவும் முடிந்தவரை விரைவாக அரசாங்கமும் மக்களும் ஒன்றிணைந்து முடிவுக்கு கொண்டுவர அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டுமின்றி, கொரோனா பரவை கட்டுப்படுத்த சீனா உள்ளிட்ட நாடுகள் கையாண்ட உத்திகளை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.