கோட்டா – ரணில் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சவாலான இறுதி 3 நாட்கள்!
புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அரசாங்கத்தின் முதல் சவாலை எதிர்வரும் செவ்வாய்க் கிழமை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
ஏனெனில் அன்றைய தினம் புதிய சபாநாயகர் தேர்தல் மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
பிரதி சபாநாயகராக தனது கட்சியைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்த தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கனவே அறிவித்துள்ளது.
இதன்படி, அரசாங்கத்தினால் ஒரு வேட்பாளரை நிறுத்தினால், இரகசிய வாக்கெடுப்பின் மூலம் அரசாங்கம் பெரும்பான்மையைக் காட்ட வேண்டும்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏற்கனவே எதிர்ப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், பி. திகாம்பரம் மற்றும் மனோ கணேசன் ஆகியோரின் கட்சிகளும் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க உள்ளனர்.
மேலும், அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக உள்ள 40 முன்னணி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் திரு.விக்கிரமசிங்கவுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஏற்கனவே கூறியுள்ளனர். இதில் விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் கட்சிகளும் அடங்கும்.
எவ்வாறாயினும், பொஹோட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழு திரு.விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், மொட்டில் உள்ள ராஜபக்சவுக்கு எதிரான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இங்கு வாக்களிப்பதில் இருந்து விலகியிருக்க வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. அன்றைய தினம் மற்றுமொரு குழுவினர் பாராளுமன்றத்தில் கலந்து கொள்வதை தவிர்த்துக்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.
எவ்வாறாயினும், ஜீவன் தொண்டமான் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிக்க தயாராகி வருவதாக தெரியவருகிறது.
இதன்படி எதிர்வரும் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள பிரதி சபாநாயகர் தேர்தலிலும் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையிலும் அரசாங்கத்திற்கும் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமது அரசியல் நிலையை உணரும் சவாலான தருணமாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.