ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: பிரபல ரவுடியிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை
கடந்த, 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி, திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என். ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கை தற்போது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வரும் நிலையில், ‘குற்றவாளிகளை கண்டுபிடிக்க முக்கிய துப்பு தெரிவிப்பவர்களுக்கு, 50 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும்’ என்று சிறப்பு புலனாய்வுக்குழு (Special Investigation Team- SIT) அறிவித்துள்ளது.
அதேவேளையில், குற்றவாளிகளை பிடிக்க எஸ்.ஐ.டி., எஸ்.பி. ஜெயக்குமார், டி.எஸ்.பி., மதன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ராமஜெயம் கொலைவழக்கில், 2005ம் ஆண்டு முதல், 2010ம் ஆண்டு வரையிலான ரவுடிகள் பட்டியலை எஸ்.ஐ.டி., தனிப்படையினர் கையில் எடுத்துள்ளனர்.
அதிலும், சந்தேக பட்டியலில் உள்ள ரவுடிகளை தேர்ந்தெடுத்து, தினமும், 5 முதல், 8 ரவுடிகளிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி முட்டை ரவியின் கூட்டாளி சாமி ரவியிடம் இன்று விசாரணை நடத்துவதால், இவ்வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சாமி ரவி மீது, திருச்சி மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி என ஏராளமான வழக்குகள் உள்ளன.
கடைசியாக, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், முசிறி அதிமுக எம்எல்ஏவாக இருந்த செல்வராசு காரில் எடுத்துச் சென்ற, 2 கோடி ரூபாய் பணத்தை வழிப்பறி செய்ததாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட சாமி ரவி, கடந்த சில வாரத்திற்கு முன் வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.