ரணில் பந்து என பிடித்தது தீப்பிளம்பா?
ரணில் பிரதமராக பதவியேற்கும் தினம் வரை (12) அரசாங்கமில்லாமல் நான்கு நாட்கள் கடந்து போனது. பிரதமராக பதவியேற்க எவருமே முன்வரவில்லை. ஜனாதிபதி வெளியேறினால்தான் பிரதமராக பதவியேற்போம் என்பது அனைவரின் பொதுவான நிபந்தனையாக இருந்தது. இதேவேளை, மொட்டு மற்றும் சுயேச்சை எம்.பி.க்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை தெரிவிக்க முன்வந்தனர்.
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமராக பதவியேற்பதற்கு முன்வைத்த நிபந்தனைகள் காரணமாக ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க செயற்பாட்டாளர்கள் குழுவொன்று தீர்மானித்தது.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நான்கு நாட்களாக அரசாங்கம் இல்லாத கதையொன்றைக் கூறினார். தற்போதைய டாலர் கையிருப்பு ஒரு வாரத்துக்கான பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு கூட போதுமானதாக இல்லை என்றார். அதன்படி, அடுத்த சில நாட்களில் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் கிடைக்காது. அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டாலர் மற்றும் ரூபாய் கையிருப்பு குறைந்துவிட்டதாகக் கூறி, ஒரு வாரத்திற்குள் நாடு அரசியல் ரீதியாக நிலையானதாக மாறாவிட்டால், மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை தான் ராஜினாமா செய்வதாக அவர் கூறினார்.
உலக அரசியல், சமூகப் பொருளாதாரத் தளங்களில் கூட இது ஒரு பயங்கரமான சரிவு.இவ்வாறான நிலையற்ற நாட்டிற்கு யாரும் உதவ முன்வருவதில்லை. சுற்றுலா பயணிகள் வருவதில்லை. முதலீட்டாளர்களும் வருவதில்லை. டாலர்கள் இல்லாததால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகளை கொண்டு வர முடியாது. மூன்று மணி நேர மின்வெட்டு 10 முதல் 12 மணித்தியாலங்கள் வரை துண்டிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டார். ஆனால் அரசியல்வாதிகளுக்கும் அவர்களைப் பின்பற்றுபவர்களுக்கும் இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்கள் அனைவரும் ஆழமற்ற நீரில் மீன்பிடித்து வருகின்றனர். பொருளாதார நெருக்கடி பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இதேவேளை, சிவில் சமூகத்தில் உள்ள சிலர் ராஜபக்சக்களை தண்டிக்க மாத்திரமே நினைக்கின்றனர்.
ராஜபக்சேக்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் அதற்கு முன் நாட்டை தற்போதைய பயங்கரமான சூழ்நிலையில் இருந்து விடுவிக்க வேண்டும்.அல்லது ராஜபக்ஷக்கள் இருக்கும் போது நாமே நம்மை தண்டித்துக் கொள்ளும் நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். ராஜபக்சக்களை தண்டிப்பதால் மட்டும் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியாது. அவர்கள் கொள்ளையடித்த பெரும் செல்வத்தை ஒரே இரவில் நாட்டுக்கு கொண்டு வர முடியாது. அதற்குக் காரணம் அவர்கள் திருடிய தேசியச் செல்வம் இலங்கை நாட்டில் இல்லை.
அந்த பணத்தை மீட்பதென்பது தெருவில் நின்று கதை பேசுவது போல் எளிதானது அல்ல. எப்படியிருந்தாலும், பட்டினியின் சிக்கலை விரைவாக தீர்க்கக்கூடிய ஒருவரின் உதவிக்கு அவசர தேவை இருந்தது. இது குறித்து மேலும் விளக்கமளித்தால், அவசர சிகிச்சைக்கு உள்ளான ஒருவர் உடனடியாக நோயாளியை அவசர சிகிச்சைக்கு பரிந்துரை செய்ய வேண்டும், மற்ற நோயாளிகளை விட நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவது முக்கியம். ஆனால் மற்ற எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், இந்த மோசமான சூழ்நிலையை அறியாமல், கடுமையான யதார்த்தத்தை மறந்து, அரசியல் கோணத்தில் மட்டுமே நிலைமையைப் பார்த்தார்கள்.
குறைந்த பட்சம் பாராளுமன்றத்தில் அதிக எதிர்க்கட்சி ஆசனங்களைக் கொண்ட தற்போதைய எதிர்க்கட்சித் தலைவராவது அவ்வாறு செய்யவில்லை. அவர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை கூட நடத்த முயற்சிக்கவில்லை, ஆனால் நிபந்தனைகளை மட்டும் விதித்தார். நாட்டின் அரசியலமைப்பின் படி, ஜனாதிபதியை நீக்க பல வழிகள் உள்ளன.
அவை நீண்ட கால முறைகள், குறுகிய கால முறைகள் அல்ல. அதுவரை அரசாங்கம் இல்லாமல் நாட்டை நடத்த முடியாது. மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகள் இல்லாத போது, பொது மற்றும் தனியார் சொத்துக்களை மக்கள் கொள்ளையடிப்பார்கள்.
பாதுகாப்பு படையினர் முதலில் கொள்ளையர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தக் கூடுமானாதாக இருந்தாலும் , அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத போது பாதுகாப்பு படையினர் ஆயுதம் ஏந்தி வீதியில் இறங்கி தமது பிள்ளைகளையும் குடும்பங்களையும் பாதுகாக்க , அவர்களே கொள்ளையடிக்கும் நிலைக்கு தள்ளப்படக் கூடும். இப்படியான அபாக்கிய நிகழ்வுகள் உலகில் காணக் கூடியதாக இருந்துள்ளது. அதன்பின் அகதிகள் போல ஐக்கிய நாடுகள் சபையின் இராணுவம் மற்றும் உணவு தரும் நிறுவனங்கள் வழங்கும் உணவை மக்கள் உண்டு வாழ வேண்டி ஏற்படலாம்.
இந்த எதிர்கால அச்சுறுத்தலைப் புரிந்து கொள்ளாத அல்லது கவலைப்படாத எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் இருந்த காரணத்தால், இந்த சவாலை ஏற்க ரணில் விக்கிரமசிங்க முன்வந்தார். பொது ஜன முன்னணி மற்றும் மக்கள் ஐக்கிய சக்தி ஆகியவற்றில் உள்ள குழுக்களின் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது. அந்த நம்பிக்கையில் ரணில் 12ஆம் திகதி மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இதற்கு முன் ரணில் விக்கிரமசிங்க கடந்த 11ஆம் திகதி இரவு ஐக்கிய மக்கள் சக்தியின் 11 பேர் கொண்ட குழுவைச் சந்தித்தார். அன்று மாலையே சீனத் தூதுவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்தார். அதனையடுத்து, நான்கு நிபந்தனைகளின் கீழ் பிரதமராக பதவியேற்கத் தயார் என சஜித் பிரேமதாச அறிவித்தார். ஒரு கட்டத்தில் ஜனாதிபதி ராஜினாமா செய்வதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவை அறிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
கடந்த 12ஆம் திகதி பிற்பகல் சஜித் தமது கட்சியின் நாடாளுமன்றக் குழுவை கூட்டிய போது , சிலர் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர், தாம் பிரதமராக பதவியேற்க விரும்புவதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார்.
ஏனெனில் ரணில் விக்ரமசிங்கவிடம் தனது கட்சியினர் தம்மை விட்டுச் சென்றால் , தனது கட்சியை இழக்கும் அபாயம் ஏற்படலாம் என அச்சமடைந்தார்.தற்போது அது தற்காலிக தீர்வாக வெற்றி பெற்றது.
கால தாமதமாக எதிர்க்கட்சித் தலைவருடைய மடல் கிடைக்கப் பெற்றதால் அவரது வேண்டுகோளை நிறைவேற்ற முடியாது என ஜனாதிபதி தரப்பிலிருந்து , எதிர்கட்சி தலைவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவைக்கு நியமனம் செய்வதற்காக சிலரது பெயர்களை ஐக்கிய மக்கள் சக்தி உடனடியாக அறிவிக்கலாம் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டது.
தற்போது இலங்கை அரசியலில் இருந்து துடைத்தெறியப்பட்டிருக்கும் ராஜபக்சே குடும்பத்தை மீண்டும் அரசியலுக்கு கொண்டுவரும் ஒப்பந்தத்தை ரணில் விக்கிரமசிங்கே எடுத்துள்ளார் என்பது அவர் மீதான பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது.
அதில் உண்மை இருப்பின் ரணில் விக்கிரமசிங்க தனது முழு அரசியல் வாழ்க்கையையும் அதற்காக தியாகம் செய்ய வேண்டியிருக்கும்.ரணில் விக்ரமசிங்க ஒரு முட்டாளாக இருக்க மாட்டார் என்பது எமது புரிதல்.
எவ்வாறாயினும் சஜித்திடம் இருந்து தவறிய பிரதமர் எனும் பந்தை ரணில் விக்கிரமசிங்க தற்போது கைப்பற்றியுள்ளார். ஆனால் முழு தேசத்தையும் சூழ்ந்துள்ள பிரச்சனை மிக குறுகிய காலத்தில் நிறைவேற்றுவதென்பது பிடித்து பந்து , தீ பந்தாகும்.
பாய்ந்து பிடித்த தீ பந்து தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வாழ்வும் விரைவில் தீக்கிரையாகிவிடும் என்பதும் உறுதி.
– லசந்த வீரகுலசூரிய
தமிழில் :ஜீவன்