ஐ.பி.எல் கிரிக்கெட் குஜராத் அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை..?
நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 8 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் இருக்கிறது. முந்தைய லீக் ஆட்டத்தில் சென்னை அணி 97 ரன்னில் சுருண்டு மும்பை அணியிடம் பணிந்தது.
கேப்டன் டோனி (ஆட்டம் இழக்காமல் 36 ரன்கள்) தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சோபிக்கவில்லை. இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங் ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்து வீசி மும்பை அணிக்கு கடும் நெருக்கடி அளித்தனர். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் உதை வாங்கியதன் மூலம் சென்னை அணியின் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பு முற்றிலும் முடிந்து போனது.
அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்ட சென்னை அணிக்கு இனிமேல் இழக்க எதுவுமில்லை என்பதால் எஞ்சிய 2 லீக் ஆட்டங்களிலும் நெருக்கடியின்றி செயல்படுவதுடன், எதிரணிகளுக்கு அதிர்ச்சி அளித்து புள்ளி பட்டியலில் ஏற்றம் காண முயற்சிக்கும்.
அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் 12 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 3 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருப்பதுடன் முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது. குஜராத் அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பலம் வாய்ந்ததாக இருக்கிறது.
நெருக்கடியான சூழ்நிலையை அந்த அணியினர் நேர்த்தியாக கையாண்டு வருகிறார்கள். பேட்டிங்கில் சுப்மான் கில், ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, விருத்திமான் சஹாவும், பந்து வீச்சில் முகமது ஷமி, ரஷித்கான், பெர்குசன், யாஷ் தயாளும் அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள். அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் குஜராத் அணி அச்சமின்றி அதிரடியை தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்க முனைப்பு காட்டும்.
சென்னைக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வலுவான குஜராத் அணிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றால் சென்னை அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒரு சேர ஜொலித்தால் தான் சாத்தியம் என்பதில் சந்தேகமில்லை.