ஐ.பி.எல். கிரிக்கெட் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் லக்னோ.
அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 4 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி எஞ்சிய இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி கண்டாலே அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விட முடியும். லக்னோ அணி முந்தைய லீக் ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்திடம் வீழ்ந்தது.
அந்த ஆட்டத்தில் 145 ரன் இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி 13.5 ஓவர்களில் 82 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை சந்தித்தது. அந்த தோல்வியை மறந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற அந்த அணி முழு திறனையும் வெளிப்படுத்தும். லக்னோ அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல், குயின்டான் டி காக், தீபக் ஹூடாவும், பந்து வீச்சில் அவேஷ் கான், ஜாசன் ஹோல்டர், மொசின்கான், ரவி பிஷ்னோய், குருணல் பாண்ட்யாவும் வலுசேர்க்கிறார்கள்.
முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு பிரகாசமாகும். ராஜஸ்தான் அணி தனது கடந்த லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் தோற்றது.
அந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் (7 ரன்) விரைவில் ஆட்டம் இழந்தது அந்த அணியின் உத்வேகத்துக்கு தடைக்கல்லாக அமைந்தது. முந்தைய தோல்வியில் இருந்து விடுபட்டு நல்ல நிலைக்கு திரும்ப அந்த அணி தீவிரம் காட்டும், ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் ஜோஸ் பட்லர் (3 சதம், 3 அரைசதம் உள்பட 625 ரன்கள்), சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல் (23 விக்கெட்) பிரசித் கிருஷ்ணா, டிரென்ட் பவுல்ட், ஆர்.அஸ்வின் ஆகியோர் அசத்தி வருகிறார்கள். லக்னோவுக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. அந்த ஆதிக்கத்தை தொடர்வதுடன் அடுத்த சுற்று வாய்ப்பை வலுப்படுத்த ராஜஸ்தான் அணி மல்லுக்கட்டும். அதேநேரத்தில் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்ய லக்னோ அணி வரிந்து கட்டி நிற்கும். இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.