சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது பொலிஸாரின் கடமையே தவிர இராணுவத்தின் கடமை அல்ல – இராணுவ தளபதி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று (14) இடம்பெற்ற சந்திப்பு காரசாரமானதெனவும், பொலிஸ் மா அதிபரும் இராணுவத் தளபதியும் தமது சொத்துக்களைப் பாதுகாக்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இது பொலிஸாருக்குரிய விடயம் என்பதை அறிந்த ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபரை கூட்டத்திற்கு அழைத்திருந்தார்.
எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் மா அதிபர் மீது குற்றம் சுமத்தி வரும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களை பாதுகாக்க தவறிய இராணுவ தளபதி சவேந்திர சில்வாவும் பதவி விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
இதன்போது இராணுவத் தளபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஜனாதிபதி, நாட்டின் சட்டத்திற்கு அமைவாக பொலிஸாரால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், அவ்வாறான சம்பவத்தில் இராணுவம் தலையிடுமாறு இராணுவத்திடம் கோரிக்கை விடுக்க வேண்டும், இல்லையெனில் இராணுவம் அவ்வாறு செய்யாது எனத் தெரிவித்துள்ளார்.
வடமத்திய மாகாண முன்னாள் அமைச்சர் ஒருவர் தலையிட்டு, 40 இராணுவத்தினர் காத்திருந்த நிலையில் மக்கள் வந்து தனது வீட்டிற்கு தீ வைத்ததாகவும், இராணுவம் எதுவும் செய்யவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் இராணுவத் தளபதியிடமும் ஜனாதிபதி வினவியிருந்ததுடன், இராணுவத் தளபதி, குறித்த அமைச்சரிடம் அப்போது அவர் வீட்டில் இருந்தாரா எனக் கேட்டுள்ளார். கொழும்பில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றிருந்த போதிலும் வடமாகாணத்தில் உள்ளவர்கள் தமது வீட்டிற்கு தீ வைப்பதை CCTV கமராக்களில் பார்த்ததாக அமைச்சர் பதிலளித்திருந்தார். இதன்படி குறித்த சிசிடிவி காட்சிகளை தமக்கு வழங்குமாறு இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளதுடன், குறித்த காணொளிக் காட்சிகளின் மூன்று பகுதிகளை அமைச்சர் உடனடியாக இராணுவத் தளபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். சம்பவ இடத்திற்குச் சென்ற இராணுவத் தளபதி, ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தவிர வேறு எவரும் சம்பவ இடத்தில் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸாரின் ஊடாக இராணுவம் பாதுகாப்பு கோரிய சில வீடுகளுக்கு இராணுவம் பாதுகாப்பு வழங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். திரு.பிரசன்ன ரணதுங்கவின் கொழும்பு வீடு, திரு.கெஹலிய ரம்புக்வெல்லவின் கொழும்பு வீடு மற்றும் இராணுவத்தினரால் பாதுகாக்குமாறு கோரப்பட்ட 6 வீடுகளின் சொத்துக்களை பாதுகாக்க இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வீடுகள் மற்றும் ஏனைய சொத்துக்களுக்கு தீ வைப்புத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.