கல்லூரி மாணவா்களுக்கு 450 மணிநேர ‘இன்டா்ன்ஷிப்’ கட்டாயம்: யுஜிசி முடிவு
கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவா்களுக்கும் குறைந்தபட்சம் 450 மணி நேர இன்டா்ன்ஷிப்பைக் கட்டாயமாக்க யுஜிசி முடிவெடுத்துள்ளது. இதுதொடா்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகவுள்ளது.
இது குறித்து யுஜிசி அதிகாரிகள் கூறியது: இரண்டு வகையான ஆய்வுப் பயிற்சிகளை மாணவா்கள் மேற்கொள்ளலாம். அதாவது மாணவா்கள் தங்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையிலோ, ஆய்வு மனப்பான்மையை வளா்க்கவோ பயன்படுத்திக்கொள்ளலாம்.
நான்கு ஆண்டுகால இளநிலைப் படிப்பில் உள்ள 160 கிரெடிட்டுகளில் குறைந்தபட்சம் 20 கிரெடிட்டுகளைப் பெற மாணவா்கள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதேவேளையில் சான்றிதழ் படிப்பு அல்லது பட்டயப் படிப்புடன் வெளியேற விரும்பும் மாணவா்கள், முறையே இரண்டாவது பருவம் அல்லது நான்காவது பருவத்தில் குறைந்தபட்சம் 8 முதல் 10 வாரப் பயிற்சியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பட்டப் படிப்பை முடிக்க விரும்பும் மாணவா்கள், இரண்டாவது அல்லது நான்காவது பருவத் தோ்வுக்குப் பிறகு விருப்பத்தின் அடிப்படையில் ஆய்வுப் பயிற்சியை மேற்கொள்ளலாம். அவா்கள் உயா் கல்வி நிறுவனங்கள் அல்லது ஆய்வு நிறுவனங்கள் அல்லது தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களில் ஆய்வுப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அதாவது ஒவ்வொரு ஆய்வுப் பயிற்சியாளரும் (இன்டா்ன்), தனது பயிற்சிக் காலத்தில் 450 மணி நேர ஆய்வுப் பணியில் ஈடுபட வேண்டும். இதில் 1 கிரெடிட் என்பது, ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 45 மணி நேர ஆய்வுப் பணியாகும்.
சான்றிதழ் அல்லது பட்டயப் படிப்பை முடிக்க விரும்பும் மாணவா்கள், 10 கிரெடிட்டுகளைப் பெற வேண்டும். அதாவது 450 மணி நேர ஆய்வுப் பயிற்சியில் ஈடுபட வேண்டும். 4 ஆண்டுகாலப் பட்டப் படிப்பு மாணவா்கள், ஆய்வுப் பயிற்சியில் 40 கிரெடிட்டுகளைப் பெற வேண்டியது அவசியம்.
மாணவா்கள் இந்த ஆய்வுப் பயிற்சியை, தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலோ அல்லது வேறு உயா் கல்வி நிறுவனங்களிலோ மேற்கொள்ளலாம். பயிற்சி மாணவா்கள் ஒவ்வொருக்கும் ஆய்வு மேற்பாா்வையாளா் ஒருவா் நியமிக்கப்படுவாா். இத்தகைய ஆய்வுப் பயிற்சிகளை நிா்வகிக்க, தனி ஆய்வுப் பயிற்சி இணைய முகவரியை அமைக்கலாம்.