சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் அணி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
15வது ஐபிஎல் தொடரின் 62வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ருத்துராஜ் கெய்க்வாட் 23 ரன்களும், ஜெகதீஷன் 39* ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய குஜராத் அணிக்கு, முதல் ஓவரிலேயே மூன்று பவுண்டரிகள் அடித்து விர்திமான் சஹா நம்பிக்கை கொடுத்தார். சுப்மன் கில் 18 ரன்களிலும், மேத்யூ வேட் 20 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 7 ரன்களிலும் விக்கெட்டை இழந்தாலும், இறுதி வரை விக்கெட்டை இழக்காத விர்திமான் சஹா, சென்னை அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு 57 பந்துகளில் 67 ரன்கள் எடுத்ததன் மூலம், 19.1 ஓவரில் இலக்கை எட்டிய குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சென்னை அணியில் அதிகபட்சமாக மத்தீஷா பத்திரானா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் மொய்ன் அலி ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.