கலிபோர்னியாவில் தேவாலயத்துக்குள் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி.
அமெரிக்கா – கலிபோர்னியா தெற்கில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்குள் புகுந்து ஆயுததாரி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து கலிபோர்னியாவின் லாகுனா வூட்ஸில் உள்ள ஜெனீவா பிரஸ்பைடிரியன் தேவாலயத்திற்கு வெளியே துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் காரி பிரவுன் தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மற்றொருவர் சிறு காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கொல்லப்பட்ட நபர் தேவாலயத்திற்குள் வைத்து அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். அவரிடம் இருந்த துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது என தெரிவித்த காரி பிரவுன், பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற நேரம் தேவாலயத்துக்குள் அதிக எண்ணிக்கையான தாய்வானியர்கள் வழிபாட்டில் பங்கேற்றிருந்தனர். எனினும் அவர்களை இலக்குவைத்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா? எனத் தெளிவாகத் தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணம் – பஃபேலோ நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றுக்குள் சனிக்கிழமை நுழைந்து ஆயுததாரி ஒருவர் சரமாரியாக சுட்டதில் 10 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்த முன்னர் வணிக வளாகத்தின் முன்பாக காரில் வந்திறங்கும் இளைஞன் துப்பாக்கிச் சூடு நடத்தவுள்ளதாகவும் அதனை நேரலை செய்யப்போவதாகவும் வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதி நியூயோர்க் நகரத்திற்கு வடக்கே சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு கறுப்பின மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இனவெறியே இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே நேற்று மற்றொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் வார இறுதி விடுமுறை நாட்களில் துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.