ஒரு குடும்பத்துக்கு ஒரு சீட்.. சிதம்பரத்துக்கு மீண்டும் எம்பி வாய்ப்பு கிடைக்குமா?
தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு கடும் போட்டி எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு குடும்பத்துக்கு ஒரு சீட் என காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளதால் ப.சிதம்பரத்துக்கு மீண்டும் சீட் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திமுக ஒதுக்கியுள்ள நிலையில், அப்பதவியை பெற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் களத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
2016ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ப.சிதம்பரத்தின் பதவி காலம் முடிவடைய உள்ளதால், மீண்டும் தமிழகத்தில் இருந்து அவர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என காங்கிரஸ் கட்சி முடிவெடுத்திருக்கும் சூழலில், கார்த்தி சிதம்பரம் மக்களவை உறுப்பினராக இருப்பதால், ப.சிதம்பரம் மாநிலங்களவை உறுப்பினராவதற்கு சிக்கல் எழுந்துள்ளதாக பேசப்படுகிறது
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவரான கே.எஸ்.அழகிரியின் பதவிகாலம் முடிவடைந்திருப்பதால், புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளார். இதனால், மாநிலங்களவை எம்.பி. சீட், கே.எஸ்.அழகிரிக்கு ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இதேபோல, காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு துறை தலைவர் பிரவீன் சக்கரவர்த்தியின் பெயரும் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது. தஞ்சாவூரைச் சேர்ந்த பிரவீன், மன்மோகன்சிங், ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பதால், இவர் எம்.பி.ஆகலாம் என பேச்சுகள் எழுகின்றன. அதேசமயம், மூத்த தலைவர்கள் தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்டோரும் எம்.பி. சீட் கேட்டு வருவதாக கூறப்படுகிறது