வன்முறை வெடிக்க எதிரணியே காரணம் இப்படிக் கூறுகின்றார் அமைச்சர் கஞ்சன.
“ஜே.வி.பி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்களின் கருத்துக்கள், குரோதமான பேச்சுக்கள் காரணமாகவே வன்முறை வெடித்தது. அலரி மாளிகைக்கு வந்து விட்டு அமைதியாக வீடுகளுக்குச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
வன்முறையில் எம்.பிக்கள் உட்பட அரசியல் பிரதிநிதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டது தொடர்பான ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது:-
“கொலையுடன் தொடர்புள்ளவர்களைக் கைதுசெய்ய வேண்டும். இதற்குத் தலைமை தாங்கியவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். அரசு சார்பில் 76 எம்.பிக்களின் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. சிலரின் அனைத்துச் சொத்துக்களும் அழிக்கப்பட்டன.
மே 9 ஆம் திகதி அலரி மாளிகையில் நடந்த கூட்டத்தின் காரணமாக எமது வீடுகள் அழிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.
திட்டமிட்ட வகையில் எமது வீடுகளைச் சுற்றிவளைக்க எதிரணி வழிகாட்டின. ஜே.வி.பி. தலைவர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களின் கருத்துக்கள், குரோதமான பேச்சுக்கள் இதற்குக் காரணமாக அமைந்தன.
அரசமைப்பின் ஊடாக முடியாவிட்டால் வேறு வழியில் ஆட்சியை மாற்றுவதாக எதிரணி உறுப்பினர்கள் தெரிவித்தார்கள். ஜனாதிபதியைத் துரத்த உதவாதவர்களை தாக்குமாறு அவர்கள் கோரினார்கள். எம்.பிக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது சபாநாயகரின் பொறுப்பாகும். எமது நிலைப்பாட்டை மாற்றி ஜனாதிபதியைத் துரத்தும் முயற்சி வெற்றியளிக்காது. அரச வாகனங்கள் கூட தீவைக்கப்பட்டுள்ளன.
மக்களின் பணத்திலே அவற்றைத் திருத்த வேண்டியுள்ளது. அரசியல் ரீதியில் பரப்பப்பட்ட 1988 – 1989 கால கலவரம் மீண்டும் வேறு வழியில் முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த 6, 7 மாதங்களில் எதிரணி முன்வைத்த உரைகளை ஆராய வேண்டும்” – என்றார்.