பஸில் இருக்கும் வரை மாற்றம் எதுவும் வராது ராதா எம்.பி. சுட்டிக்காட்டு.
“பிரதி சபாநாயகர் தெரிவில் கட்சிகள் ஒற்றுமையாகச் செயற்படத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை இல்லாமல் செய்தவர் பஸில் ராஜபக்சவே. இவரை இலங்கை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தாத வரை மாற்றத்தைக் கொண்டுவர முடியாது” என்று நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பிரதி சபாநாயகர் தெரிவு தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பிரதி சபாநாயரைத் தெரிவு செய்யும் விடயத்தில் பிரதமரின் கருத்தாக இருந்தது பெண் ஒருவரைத் தெரிவு செய்ய முடியுமாக இருந்தால் அது சிறப்பானது என. அதன்படி ஜக்கிய மக்கள் சக்தி அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி பெண் ஒருவரைப் பெயரிட்டிருந்தது. அதற்கு அனைவரும் சம்மதித்திருந்த நிலையிலேயே தெரிவு நடைபெற்ற அன்று காலையில் பஸில் ராஜபக்சவின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் ஒருவர் நியமிக்கப்பட்டார்.
இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் இருண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டன. எனவே, இந்தச் சந்தர்ப்பத்தில் வாக்கெடுப்பு ஒன்றின் மூலமாகத் தெரிவு செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டதுடன் இரண்டு குழுக்களாக பிரிந்து செயற்பட வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.
இதன் காரணமாக ஒற்றுமைiயாகச் செயற்படத் தீர்மானித்திருந்த விடயத்தை இல்லாமல் செய்து கட்சிகளைப் பிரித்தவர் இந்தப் பஸில் ராஜபக்சவே. இவருக்கு இது கைவந்த கலை.
கடநத காலங்களில் இவர் சிறுபான்மைக் கட்சிகளைப் பிரித்துத் துண்டாடினார். இன்றும் அதே வேலையை இவர் தொடர்ந்து செய்கின்றார்.
அதேநேரத்தில் நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரசிங்க நினைப்பது போல் நடக்க முடியாது என்பதை இந்தப் பிரதி சபாநாயகர் தெரிவின் மூலமாக பஸில் ராஜபக்ச பிரதமருக்கு உணர்த்தியுள்ளார்.
எனவே, இவ்வாறானவர்களுடன் பிரதமர் தொடர்ந்து எப்படி பயணிக்கப் போகின்றார்?அவர் எதிர்பார்க்கின்ற மாற்றத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவார்? தேசிய அரசு ஒன்றை அமைப்பது அல்லது அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயற்படுவது என்பதெல்லாம் வெறும் பேச்சில் மாத்திரமே இருக்க முடியும். செயலில் காட்ட முடியாது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயம் தொடர்பாக உடனடியாக சரியான ஒரு முடிவை எடுக்க வேண்டும். யாருடன் தொடர்ந்து பயணிப்பது? அப்படியானால் உடனடியாகச் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன? என்பதைச் சிந்தித்துச் செயற்பட வேண்டும். இல்லாவிட்டால் அவர் எதிர்பார்க்கின்ற இலக்கை நோக்கி ஒருநாளும் பயணிக்க முடியாது.
பஸிலின் தலையீடு தொடருமாக இருந்தால் ஏனைய கட்சிகள் பிரதமருக்கு வழங்குவதற்குத் தீர்மானித்திருக்கின்ற ஆதரவைத் தொடர முடியுமா? என்ற கேள்வியும் ஏற்படும். எனவே, இது தொடர்பாக பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா? என்ற கேள்வியே இப்போது எங்களிடம் இருக்கின்றது” – என்றார்.