நிமிடத்திற்கு நிமிடம் கொட்டிய லஞ்ச பணம்.. திருச்சியில் பண வேட்டை – “டிக்” பொது மேலாளர் சிக்கியதால் அம்பலம்
ஒருகாலத்தில் விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக கொண்டிருந்தது திருச்சி மாவட்டம் பெல் எனப்படும் பாரத மிகுமின் நிறுவனம் (பி.ஹெச்.இ.எல்.,), மத்திய அரசின் பாதுகாப்பு நிறுவனங்களான, துப்பாக்கி தொழிற்சாலை (ஓ.எஃப்.டி.,), கனரக உலோக ஊடுருவி தொழிற்சாலை (ஹெச்.ஏ.பி.பி.,) வருகைக்கு பிறகு தொழில் நகரமாக உருவெடுத்தது.
பெல் சார்பு நிறுவனங்கள் உட்பட மாவட்டம் முழுவதும், 18 ஆயிரம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் வளர்ச்சி காரணமாக தொழில் துறையில் ஒரு வலுவான இடத்தை திருச்சி தக்க வைத்துக் கொண்டுள்ளது. தொழில் நிறுவனங்களை மேம்படுத்தவும், தொழில் துவங்க நினைக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கவும் அரசால் துவங்கப்பட்ட அமைப்பு தான் மாவட்ட தொழில் மையம் (“டிக்”).சேவை செய்வதை போல செய்ய வேண்டிய வேலையை வைத்து, திருச்சியில் பண வேட்டை ஆடியவர்கள், லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கியதால் ஆடிப் போயிருக்கிறது அரசுத்துறை வட்டாரம்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கூறியபோது, “தொழில் முனைவோர்களை உருவாக்கவும், ஊக்கப்படுத்தவும் துவங்கப்பட்டது தான் திருச்சி மாவட்ட தொழில் மையம். ஆனால், திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது, வங்கிக்கடனுக்கு மானியம் பெற்று தருவது, தொழில் விரிவாக்கத்திற்கு வாங்கப்படும் இயந்திரங்களை ஆய்வு செய்வதில் மட்டும் அதீத ஆர்வம் காட்டியுள்ளனர்.இதற்கு காரணம், இவற்றுக்கெல்லாம் பொதுமேலாளர் ரவீந்திரன், 20 சதவீதம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு செய்துள்ளார். இவருக்கு உடந்தையாக உதவி பொறியாளர் கம்பன் செயல்பட்டுள்ளார்.
அரசு மானியமாக வழங்குகின்ற பணம் என்பதால், இவர்களுக்கு லஞ்சம் கொடுப்பதை தொழில் முனைவோர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. 5 லட்ச ரூபாய் முதல், 5 கோடி ரூபாய் வரை மானியத் தொகையை ஒப்புதல் வழங்க பொதுமேலாளருக்கு அதிகாரம் உள்ளது. தொழில் விரிவாக்கம் செய்ய முயற்சிக்கும், அரிசி ஆலை அதிபர்கள், பால் பண்ணை முதலாளிகள் தான் இவர்களுக்கு முக்கிய குறியாக இருந்துள்ளது.அவர்கள் புதிதாக வாங்கியதாக கூறப்படும் இயந்திரம், பழையதாக இருந்தாலும் அதற்கு ஒப்புதல் வழங்கி, அதற்குரிய லஞ்சத்தை பெற்றுள்ளனர்.
தொடர்ச்சியாக இந்த மையம் மீது புகார்கள் வந்தாலும், எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்க முன்வரவில்லை. இதனால் தொடர்ச்சியாக இந்த மையத்தை கண்காணித்து வந்தோம். நேற்று முன்தினம், திருச்சி கன்டோன்மென்ட் ஆட்சியர் அலுவலக சாலையிலுள்ள மாவட்ட தொழில் மையத்தில் திடீர் சோதனை நடத்தினோம்.அப்போது அங்குள்ள பொதுமேலாளர் அறையில் கணக்கில் வராமல் வைக்கப்பட்டிருந்த, 3 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து, பொதுமேலாளர் ரவீந்திரன், உதவி பொறியாளர் கம்பன் ஆகியோரை ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தோம்.உறையூரிலுள்ள ரவீந்திரன் வீட்டிலும், திருவெறும்பூர் வசந்தம் நகரிலுள்ள கம்பன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. கம்பன் வீட்டில் எதுவும் சிக்கவில்லை.
அப்போது ரவீந்திரன் வீட்டிலிருந்து, 6 லட்ச ரூபாய் ரொக்கம், 52 சவரன் நகைகள், 25 லட்ச ரூபாய்க்கான நிரந்தர வைப்புத்தொகை ஆவணங்கள், வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள, 15 லட்ச ரூபாய்க்கான ஆவணங்கள், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான, 2 வீடுகளின் ஆவணங்கள், 3 லாக்கர்களின் சாவி ஆகியவற்றை கைப்பற்றினோம்.
அதைத்தொடர்ந்து, தில்லைநகரிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீஸார், வங்கி அதிகாரிகள் முன்னிலையில் நேற்று லாக்கர்களை திறந்து சோதனையிட்டனர்.அங்கு, 110 சவரன் நகைகள், 1.250 கிலோ வெள்ளிப் பொருட்கள் இருந்தன. அவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்.
ரவீந்திரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், நகைகள், சொத்து ஆவணங்களின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.அவருக்கு உடந்தையாக இருந்த கம்பன் மீதும் ஊழல் வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரவீ்ந்திரனின் சொத்து விபரங்களை விசாரித்து வருகிறோம்.
அதனடிப்படையில் சொத்து குவிப்பு வழக்கும் பதிவுச் செய்யப்படும்.
இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட விபரங்களை அனுப்பி, இவர்கள் இருவரின் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளோம்” என்றனர்.