வற்றாப்பளை கண்ணகி அம்மன் வருடாந்த பொங்கலுக்கான ஆலோசனைக் கூட்டம்!
வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழாவுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்றைய தினம் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் வருகின்ற 13.06.2022ம் திகதி அன்று நடைபெறவுள்ளது.
இந் நிலையில் இதற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் தொடர்பில் இன்று துறைசார்ந்த திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள், ஆலய பரிபாலனசபையினருடன் கலந்துரையாடப்பட்டு பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டன.
குறித்த கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸவரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பொறியியலாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி, மாவட்ட சுகாதார பரிசோதகர், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரி, மாவட்ட பொலிஸ் அதிகாரி, மாவட்ட இராணுவப் பொறுப்பாளர், மாவட்ட மின்சார சபை அதிகாரி, மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரி, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினர், கலாசார உத்தியோகத்தர்கள், ஏனைய தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.