கோட்டாபய இல்லாத புதிய அரசாங்கத்திற்கே IMF பணம் வழங்கும் என அனுப்பிய கடிதம் : லக்ஷ்மன் கிரியெல்ல
கோட்டாபயவின் அரசின் முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி , இலங்கையின் திவால்நிலைக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) பல பில்லியன் டொலர்கள் கடனைப் பெற தாமதித்தாவது கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் கோட்டாபய இல்லாத இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு மட்டுமே நிதியுதவி அளிக்கப்படும் என IMF அறிவித்துள்ளதாக இன்று (19) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
“புதிதாக அமையும் அரசாங்கத்திற்கு உதவுகிறோம் என இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் கடிதம் அனுப்பியுள்ளது உங்களுக்குத் தெரியுமா?, இது புதிய அரசாங்கமா? பழைய மது புதிய போத்தல்களில் , அமைச்சரவையைக் கூட இன்னும் நியமிக்க முடியவில்லை. தலைகளை மாற்றுவதால் அது புதிய அரசாங்கமாக கருதப்படாது. இது புதியதொரு அரசு இல்லை. அப்படி கிடைத்தாலும் சிறு தொகையொன்று கிடைக்கலாம். புதியதொரு அரசு வந்தாலும் சர்வதேசமும் , IMFம் ஒரு வருடமாவது காலக் கெடு ஒன்றை கொடுக்கும். அதுவரை ஒரு சிறு தொகை கிடைக்கலாம்” என லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்திற்கு அதிக நிதி அதிகாரம் இருப்பதாக நாம் கூறுகின்ற போதிலும், அது அவ்வாறு இல்லை எனவும் அவை அத்தனையும் 20வது திருத்தத்தின் பின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் உள்ளது எனவும் , அவர் தன் விருப்பப்படி செலவு செய்து நாட்டை இப்படியான நிலைக்கு தள்ளிவிட்டார்.
இதனால், பிரதமராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க கூட, பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச சமூகத்திடமிருந்தோ அல்லது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தோ போதிய நிதியைப் பெறமாட்டார் என தோன்றுகிறது எனவும் அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.