இது நடந்தால் மட்டுமே பெங்களூர் அணியால் ப்ளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெற முடியும்!
குஜராத் அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி தனது ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொண்டது. அதே வேளையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
பெங்களூர் அணி இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் மீண்டும் நான்காவது இடத்திற்கு முன்னேறி தனது ப்ளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்து கொண்டாலும், 22ம் தேதி நடைபெற இருக்கும் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் இடையேயான போட்டியின் முடிவே முக்கியமானதாகும்.
இன்று மாலை (20-5-22) நடைபெறும் சென்னை – ராஜஸ்தான் இடையேயான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் ராஜஸ்தான் அணி 18 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிவிடும். ராஜஸ்தான் அணி 2வது இடத்திற்கு முன்னேறினால், லக்னோ அணி மூன்றாவது இடத்திற்கு பின்தள்ளப்படும். ஒருவேளை சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியடையும் பட்சத்தில் ராஜஸ்தான் அணியும் மும்பை – டெல்லி இடையேயான போட்டியின் முடிவிற்காக காத்திருக்கும் நிலை ஏற்படும்.
சனிக்கிழமை நடைபெறும் டெல்லி – மும்பை இடையேயான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் அது பெங்களூர் அணிக்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். டெல்லி அணி தோல்வியடைந்தால் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.
ஒருவேளை மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்று, மறுபுறம் சென்னை அணியிடம் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தாலும், பெங்களூர் அணிக்கான வாய்ப்பு மிக குறைவாகவே பார்க்கப்படுகிறது. பெங்களூர் அணியைவிட ராஜஸ்தான் அணி ரன் ரேட்டில் நல்ல நிலையில் உள்ளதால், பெங்களூர் அணியைவிட ராஜஸ்தான் அணிக்கே வாய்ப்பு மிக அதிகம். ராஜஸ்தான் அணி சென்னை அணியிடம் மிக மோசமான தோல்வியை சந்தித்தால் மட்டுமே அது பெங்களூர் அணிக்கு சிறிது சாதகமாக அமையும்.
ஒருவேளை எஞ்சியுள்ள இரண்டு போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரண்டு அணிகளுமே வெற்றி பெற்றால், இரண்டு அணிகளையும் விட ரன் ரேட்டில் குறைவாக இருக்கும் பெங்களூர் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை இழக்க நேரிடும்.