திமுகவுக்கு மண்டியிட்டு பழக்கம் இல்லை.. மாநிலத்தின் உரிமைகளை காக்க போராடுகிறோம்.. – திருச்சி சிவா
சலுகைக்காக, ஆதாயத்திற்காக எந்த காலத்திலும் கொள்கைகள் குறிக்கோள்களை திமுக இழந்துவிடவில்லை. உச்சநீதிமன்றம் வழிவகுத்து இருப்பதன் மூலம் மாநிலத்தின் உரிமைகளை பாதுகாக்க போராடுகின்ற முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார் என திருமங்கலத்தில் நடைபெற்ற திமுக ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. உரையாற்றினார்.
திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் கட்சியினரால் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் ஜவஹர் நகர் பகுதியில் திமுகவின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி. பங்கேற்று உரையாற்றினார்.
அவர் பேசியபோது திமுக கொடுத்த வாக்குறுதிகள் 505 நீங்கள் தந்த காலம் 5 ஆண்டுகாலம் ஆனால் ஓராண்டிற்குள் ஏறக்குறைய 300 க்கும் மேற்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றிய சரித்திர ஆட்சி மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி. அதிமுக ஆட்சியில் யார் வேண்டுமானாலும் பணியில் சேரலாம் என்று கூறியதால் மின்சார வாரியத்தில் பல்வேறு துறைகளில் ஹரியானா, உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட பகுதியிலிருந்து பணியில் சேர்ந்தவர்கள். யார் வேண்டுமென்றாலும் அதிமுக கூறியதால் தமிழர்கள் வேலை வாய்ப்பை இழந்தனர்.
மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல் காரியம் யார் வேண்டுமானாலும் என்ற வார்த்தையை எடுத்துவிட்டு, தமிழக அரசு பணிகளில் தமிழ்நாட்டு மக்கள்தான் சேர வேண்டும் என மாற்றியதால், திமுக கொண்டு வந்த திட்டத்தின் மூலம் 6 லட்சம் வேலை வாய்ப்புகள் தற்போது உருவாகியிருக்கிறது அத்தனையிலும் தமிழ்நாட்டு தங்கங்கள் எல்லாம் இடம் பெறுவார்கள். ஒன்றிய அரசோடு பேசவேண்டியதை பேசி பெற வேண்டியதை பெறுகிறோம். அதே நேரத்தில் அவர்கள் ஏதாவது எல்லை மீறி செய்தால் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற பேசுகிற உணர்ச்சி, தெம்பு திமுகவுக்கு இருக்கிறது. மண்டியிட்டு பழக்கம் இல்லை அதே நேரத்தில் அடாவடித்தனம் செய்ததில்லை.
சென்ற ஆட்சி காலத்தில் நிறைவேற்றிய சாதனைகளால் இரண்டாவது முறை வெற்றி பெற்றுவிட்டதாக பாஜக கருதுவது தவறு. நீங்கள் கடந்த கால ஆட்சியில் எதுவும் சரியாக செய்யவில்லை. ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருகிறோம் என்று கூறி, தரவில்லை. கருப்பு பணத்தை வைத்து 15 லட்சம் ரூபாய் தருவோம் என்றார்கள் தரவில்லை. மாறாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்தீர்கள் ரூ.1000, 500 செல்லாது என்று அறிவித்த போது இந்த நாட்டு மக்கள் தத்தளித்த தவிப்பு யாருக்கு தெரியும், கையில் காசு இருந்தது வங்கியிலிருந்து அதை எடுக்க முடியாமல் சாதாரண மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது 2000 ரூபாய் நோட்டை வைத்துக் கொண்டு எத்தனை பேர் அலைந்தார்கள்.
ஜிஎஸ்டி கொண்டு வந்தீர்கள் அது வெற்றிக்கு காரணம் அல்ல. எதிர்கட்சிகள் ஒற்றுமை இல்லாமல் இருந்ததுதான் உங்கள் வெற்றிக்கு காரணம். ஆனால் தமிழகத்தில் எல்லாக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து உரிய மரியாதை அளித்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதால், தமிழகத்தின் அனைத்து இடங்களையும் திமுக கைப்பற்றியது. ஒரு அரசாங்கம் திட்டங்களைத் தீட்டி அதை மக்களுக்கு சென்று சேர்கிறதா என கண்காணிப்பதும் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் விழித்திருந்து உழைத்த வின்சென்ட் சர்ச்சில், நேரு, கலைஞர் வரிசையில் இன்றைக்கு தமிழக முதல்வர் இருக்கிறார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் ஆகிறது. அதற்குள்ளாக நாங்கள் இவ்வளவு செய்திருக்கிறோம். நான் சொன்னவை சில மட்டுமே. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது போல தமிழகத்தில் சிறந்த முதல்வராவது என்பது அல்ல என் வேலை தமிழ்நாடுதான் தலை சிறந்த மாநிலம் என்று கொண்டு போய் நிறுத்துவதுதான் என் வேலை என்றார் மு.க. ஸ்டாலின் என்று பேசிய திருச்சி சிவா, பேரறிவாளன் விடுதலையை நீதிமன்றத்தில் போராடி பெற்று இருக்கிறோம். மீதி ஆறு பேருடைய விடுதலை விரைவில் வரும் என்ற நம்பிக்கை உச்ச நீதிமன்றம் தந்திருக்கிறது என்றார்.
தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, ஜிஎஸ்டி கவுன்சில் தருகிற பரிந்துரைகளை மாநில அரசு, மத்திய அரசு ஏற்று நடக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அதை எதிர்த்து சட்டம் நிறைவேற்றலாம் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. மாநிலத்தின் உரிமைகளை காக்க நாங்கள் போராடுகிறோம் நாடாளுமன்றத்தில், உச்ச நீதிமன்றம் வழி வகுக்கிறது அதை பாதுகாக்க உணர்ச்சியும் தெம்பும் திராணியும் தைரியமும் உள்ள ஒருவர் தமிழ்நாட்டு முதல்வர்.
சலுகைக்காக, ஆதாயத்துக்காக ஏதோ ஒன்று கிடைத்தது என்பதற்காகவோ எங்களை எங்களது கொள்கையை குறைகூறி லட்சியத்தை எக்காலத்திலும் இந்த இயக்கம் இழந்ததுமில்லை, இழக்கப்போவதுமில்லை. ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற சரித்திர தலைவர்கள் வரிசையில் அவர்களின் தொகுப்பாக இன்றைய முதல்வர் இருக்கிறார் ஒரு ஆண்டுகாலம் நிறைவேறியது என பேசினார்.