நாமலிடம் மூன்றரை மணிநேரம் வாக்குமூலம் பதிவுசெய்த சி.ஐ.டி.
இலங்கையில் இம்மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நேற்று மூன்றரை மணிநேரம் வாக்குமூலம் பெற்றனர்.
நேற்று மாலை 4 மணிக்குக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த அவர், இரவு 7.30 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.
காலிமுகத்திடலில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பில் பல தரப்பினரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக்க உள்ளிட்ட 15 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டிப் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் ஹோகந்தர பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
எதுல் கோட்டை பகுதியைச் சேர்ந்த 43 வயதானவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இதுவரையில் பெண் ஒருவர் உட்பட 16 பேர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.