இ.தொ.காவுக்கு ரணில் அழைப்பு.
சர்வகட்சி இடைக்கால அரசின் அமைச்சரவையில், அங்கம் வகிக்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதம அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கமைய புதிய அமைச்சரவை பெயர்ப்பட்டியலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய அரசில், மொட்டுக் கட்சி தவிர, ஏனைய கட்சிகளுக்கான, அமைச்சுகளை ஒதுக்கும் பொறுப்பு பிரதமரிடமே கையளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜீவன் தொண்டமானின், பெயரைப் பரிந்துரைத்துள்ளார்.
அமைச்சுப் பதவியை ஏற்பதற்குகே காங்கிரஸ் தரப்பு கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்திருந்தாலும், இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
இந்தியா சென்றுள்ள இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி. ஆகியோர் நாடு திரும்பிய பின்னர், இது சம்பந்தமாக கலந்துரையாடி இறுதி முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கட்சி ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் நாளைமறுதினம் திங்கட்கிழமை ஜீவன் தொண்டமான் அமைச்சராகப் பதவியேற்கக்கூடும்.