20ஐ உடன் நீக்குங்கள் ரணிலுக்குக் கரு ஜயசூரிய அவசர கடிதம்.
நாட்டு மக்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்துவதற்கும், 20 ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு முன்னாள் சபாநாயகரும் சமூக செயற்பாட்டாளருமான கரு ஜயசூரிய தலைமையிலான 155 சமூகச் செயற்பாட்டாளர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுத்துமூலமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மீதும் அவர் தலைமையிலான அரசின் மீதும் தொடர்ச்சியாக மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில் தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இடைக்கால அரசு ஒன்று நிறுவப்பட்டது. எனினும், இந்த இடைக்கால அரசுக்கும் பொதுமக்கள் மத்தியில் அதிகமான எதிர்ப்பு எழுந்திருக்கின்றது. இந்நிலையிலேயே முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான 155 பேர் இவ்வாறு கடிதம் ஒன்றை எழுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் அங்கீகரிக்கக்கூடிய அரசை அமைத்து நிவாரணங்களை வழங்குமாறும் கருஜயசூரிய உள்ளிட்ட 155 சிவில் சமூகப்பிரதிநிதிகள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.