‘பாஜகவை இப்படித்தான் எதிர்கொள்ளப் போகிறோம்’: ராகுல்காந்தியின் புதுவியூகம்
பாஜகவிற்கு எதிரான போராட்டம் மாநிலக் கட்சிகளை உள்ளிடக்கிய குழு முயற்சியாக இருக்கும் என லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் ராகுல்காந்தி தெரிவித்தார்.
இந்தியாவிற்கான யோசனைகள் எனும் தலைப்பில் லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சி மாநிலக் கட்சிகளை மதிப்பதாகவும் பண பலம் மற்றும் அதிகார பலத்தால் பாஜக ஊடகங்களை விலைக்கு வாங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டு பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாட்டில் மக்களின் குரல் நசுக்கப்படுகிறது. மக்களின் கருத்தைப் பாதுகாக்க காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாடுபடும்” எனத் தெரிவித்தார்.
மேலும், “பாஜகவிற்கு எதிராக மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து நாடு தழுவிய இயக்கத்தை காங்கிரஸ் கட்சி தொடங்க உள்ளது. அதிகாரத் தன்மையுடன் காங்கிரஸ் கட்சி நடந்துகொள்ளாது. பாஜகவை வீழ்த்த மாநிலக் கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி செயல்படும். இது ஒரு சித்தாந்தப் போர். திமுகவை தமிழ் அரசியல் அமைப்பாக மதிக்கிறோம். ஆனால் காங்கிரஸ் கட்சிக்குத் தான் தேசிய அளவில் சித்தாந்தம் உள்ளது.
தேசிய அளவில் பாஜகவை எதிர்த்துப் போராடுவது காங்கிரஸால் மட்டுமே முடியும், சித்தாந்தம் இல்லாததால் மாநிலக் கட்சிகளால் இந்தப் போராட்டத்தை நடத்த முடியாது.
காங்கிரஸ் கட்சி முற்றிலும் புதிய வழியில் மக்களுக்கு மிகவும் நெருக்கமான அமைப்பாக மாற வேண்டும். இந்தியாவின் ஆன்மா பாஜகவின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. மத்திய அரசால் சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளன” என ராகுல்காந்தி தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் சிந்தனை அமர்வு முக்கியத்துவம் பெற்ற நிலையில் ராகுல்காந்தியின் சமீபத்திய உரை கவனம் பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.