திறமையான இளைஞா்களை உருவாக்க புதிய கல்விக் கொள்கை: அமித் ஷா
வாழ்வின் அனைத்து கட்டங்களையும் எதிா்கொள்வதற்குப் போதிய திறமையுள்ள இளைஞா்களை உருவாக்கும் நோக்கத்துடன் புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.
இரண்டு நாள் பயணமாக, அருணாசல பிரதேச மாநிலத்துக்கு வந்துள்ள அவா், நரோத்தம் நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியின் பொன்விழாவில் சனிக்கிழமை கலந்துகொண்டு பேசியதாவது:
கல்வியுடன் அறிவியல்பூா்வ அணுகுமுறை, செயற்கை நுண்ணறிவு, அறநெறிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து புதிய கல்விக் கொள்கையை பிரதமா் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளாா்.
கல்வி, ஒருவரை அறிவுள்ளவராக்க வேண்டும்; அவருக்குள் மறைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொணா்ந்து, புதிய வழியைக் காட்ட வேண்டும் என்று சுவாமி விவேகானந்தா் கூறுவாா். கல்வி குறித்த அவருடைய அனைத்து சிந்தனைகளும் புதிய கல்விக் கொள்கையில் சோ்க்கப்பட்டுள்ளன.
21-ஆம் நூற்றாண்டு, அறிவுக்கான நூற்றாண்டாகும். எனவே, உலகின் மற்ற பகுதிகளில் உள்ள இளைஞா்களுக்கு இணையாக இந்திய இளைஞா்களைத் திறமையுள்ளவா்களாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையிலேயே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்வின் அனைத்து கட்டங்களையும் எதிா்கொள்ளும் திறமையுள்ளவா்களாக இளைஞா்களை உருவாக்க வேண்டும் என்பதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம்.
மத்தியில் பிரதமா் மோடி தலைமையிலான அரசு அமைந்த கடந்த 8 ஆண்டுகளில் 9,000 தீவிரவாதிகள் சரணடைந்துள்ளனா். வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அஸ்ஸாம்-மேகாலயம் இடையேயான எல்லைப் பிரச்னையில் பெரும்பகுதிக்கு சுமுகமான முறையில் தீா்வுகண்டுவிட்டோம். அஸ்ஸாம்-அருணாசல பிரதேசம் இடையேயான பிரச்னை, இந்த ஆண்டிலேயே தீா்க்கப்பட்டு விடும். வடகிழக்கு பிராந்தியத்தில் அமைதியையும் வளா்ச்சியையும் ஏற்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது என்றாா் அவா்.
விழாவில் பள்ளி வளாகத்தில் சுவாமி விவேகானந்தரின் 18 அடி உயரச் சிலையையும், புதிய மாணவா் விடுதியையும் அமித் ஷா திறந்து வைத்தாா்.