ரேஷன் கடையில் எடையில் யாரும் ஏமாற்ற முடியாது.. அரிசி, சர்க்கரை இனி பாக்கெட்டில் தான் டெலிவரி!
நியாய விலைக்கடைகளில் இனி அரசி, பருப்பு, சர்க்கரை பாக்கெட்டுகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் உணவு மற்றும் உணவு வழங்கல் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆன்லைன் மூலம் முன்பதிவு தொடக்கம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் 95 சதவீதம் பேர் தற்போது ஆன்லைன் மூலமாக பதிவு செய்து வருகின்றனர். மேலும் நேரடி பொருள் நிலையத்தில் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியம் ஏற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக அங்கு இருக்கக்கூடிய கணக்கர்கள், எழுத்தர்கள், அலுவலர்களுக்கு மூட்டை ஒன்றுக்கு கையூட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது.
புகாரின் பேரில் இதுவரை 150 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து இதனைக் கட்டுப்படுத்த அனைத்து நேரடி கொள்முதல் நிலையத்திலும் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் விவசாயிகள் புகார் தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த புகார் பெட்டி சாவி மாவட்ட ஆட்சியரிடம் உள்ளது எனத் தெரிவித்தார்.
வரும் காலங்களில் திறந்தவெளி நேரடி கொள்முதல் நிலையம் இல்லாதவாறு ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விரைவில் அனைத்து நியாயவிலை கடைகளிலும் அரிசி, சர்க்கரை, பருப்பு ஆகியவற்றை பாக்கெட்டுகளில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்தும் பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என தெரிவித்தார்.
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தொடர்ந்து புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தனிப்படைகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்
பலர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் சிலர் குண்டர் தடுப்பு சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடந்த ஆண்டை கட்டிலும் 100 சதவீதம் கடத்தல் தடுக்கப்படுள்ளது என தெரிவித்தார்.
ஒரே ஆண்டில் 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளது என்றும் 12 லட்சம் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.