கடைசி ஓவர் வரை பெங்களூர் வீரர்களுக்கு பயத்தை காட்டிய மும்பை அணி; போராடி வீழ்ந்தது டெல்லி அணி !!
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி மற்றும் பெங்களூர் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பை தீர்மானிக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ரோவ்மன் பவல் 43 ரன்களும், ரிஷப் பண்ட் 39 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை அந்த அணியின் கேப்டனான ரோஹித் சர்மா 2 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான இஷான் கிஷன் 48 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
இதன்பின் களமிறங்கிய பெர்வீஸ் 37 ரன்களிலும், திலக் வர்மா 21 ரன்களிலும் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களத்திற்கு வந்த அதிரடி ஆட்டக்காரரான டிம் டேவிட் 11 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்ததன் மூலம் 19.1 ஓவரில் இலக்கை எட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி அணியில் அதிகபட்சமாக நோர்கியா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இந்த தோல்வியின் மூலம், டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது ப்ளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டுள்ளது. அதே வேளையில், இந்த மும்பை இந்தியன்ஸ் அணி தான் வெற்றி பெற வேண்டும் என கடந்த இரண்டு நாட்களாக தவமிருந்து காத்திருந்த பெங்களூர் அணி, நான்காவது அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.