இலங்கை மக்களுக்காக நிதி சேகரிக்க தேநீர் மொய் விருந்து நடத்திய இந்திய நபர்.

தற்போது இலங்கை நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக நாட்டு மக்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இலங்கை நாட்டு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் தமிழகத்தின் புதுக்கோட்டை அருகே உள்ள தேநீர் கடையொன்றில் மொய் விருந்து நடத்தி நிதி சேகரிக்கும் நடவடிக்கையினை ஒருவர் முன்னெடுத்துள்ளார்.
புதுக்கோட்டை அருகே உள்ள வம்பன் 4 ரோட்டில் கடந்த பத்தாண்டுகளாக பகவான் என்ற பெயரில் டீ கடை நடத்தி வந்த சிவக்குமார் என்பவர் இவ்வாறு நேற்று(22) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மொய் விருந்து நடத்தியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவி செய்ய தங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில் பலரும் அவர்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இது தொடர்பில் சிவக்குமார் தெரிவிக்கையில்,
“இன்று தனது கடையில் தேனீர் குடிப்பவர்களிடம் எந்த ஒரு தொகையும் வாங்காமல் இலங்கை மக்களுக்காக உதவி கரம் நீட்ட நிவாரணம் வசூல் செய்யப்பட்டு வருவதாகவும் வசூலிக்கப்படும் தொகையை வாய்ப்பிருந்தால் தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து கொடுப்பேன் என்றும் இல்லாவிட்டால் மாவட்ட ஆட்சியர் மூலம் வசூல் செய்த தொகையை வழங்குவேன்” என்றும் தெரிவித்துள்ளார்.