உயிர்காக்கும் மருந்துகளைப்பெற வடக்கு ஆளுநர் பெரும் இடையூறு?
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குத் தேவையான அத்தியாவசியமான – அவசர தேவையாகவுள்ள உயிர் காக்கும் மருந்துகளை புலம்பெயர் நன்கொடையாளர்களிடமிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்வதற்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளார் என்று நம்பகரமாகத் தெரியவருகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாட்டை அடுத்து கொழும்பு சுகாதார அமைச்சு சில அறிவுறுத்தல்களை, மாகாண மற்றும் தேசிய மருத்துவமனைகளுக்கு விடுத்தது.
நன்கொடையாளர்களிடமிருந்து நேரடியாக மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அது தொடர்பான விவரங்களை தமக்கு அனுப்பி வைத்தால் போதுமானது எனவும் அறிவுறுத்தியிருந்தது. இதற்கு அமைவாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை என்பன மருந்துகளை நன்கொடையாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்டன.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையால், சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒரு தொகுதி மருந்துகளுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கு அமைவாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கமும் அதனை வழங்க இணங்கியிருந்தது.
இந்தநிலையில் மூன்று தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வட்டாரங்களை தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்ட வடக்கு ஆளுநர், தனக்குத் தெரியாமல் அதனை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்று கேட்டுள்ளார். அத்துடன் அந்த மருந்துப் பொருள்கள் கிடைக்கப்பெறுவதற்கும் இடையூறு ஏற்படுத்தியுள்ளார். இந்தத் தகவலை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் உறுதி செய்தார்.
அதேதினத்தில், தனக்குத் தெரியாமல் எந்தவொரு நன்கொடையாளரிடமிருந்தும் மருந்துப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கும் ஆளுநர் வாய்மொழிமூலமான பணிப்புரையையும் விடுத்துள்ளார்.
இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றதாகத் தெரிவித்து இதுவரை 3 தடவைகள் மருந்துப் பொருள்களைக் கையளித்துள்ளார். ஆனால், அந்த நன்கொடையாளர்கள் யார்? அவர்கள் வழங்கிய உதவித் தொகை எவ்வளவு? என்ற விவரங்களை அவர் வழங்கவில்லை.
அதேவேளை மூன்று தடவைகளும் கொழும்பைச் சேர்ந்த ஒரே நிறுவனத்தின் ஊடாகவே மருந்துப் பொருள்கள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
அந்த நிறுவனம் கொரோனா இடர்காலப் பகுதியில், அன்டிஜென் சோதனைக் கருவிகளை குறைந்த விலையில் கொள்வனவு செய்து அரசுக்கு கூடிய விலையில் விற்பனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு சர்ச்சையில் சிக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் கைத்தொலைபேசிக்கு அழைப்பை எடுத்து அவரது பதிலைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தபோதும் அவர் அழைப்புக்குப் பதிலளிக்கவில்லை.