திரை விமர்சனம்: நெஞ்சுக்கு நீதி.
பணியில் இணைந்த முதல் நாளிலேயே பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார் காவல் உதவி கண்காணிப்பாளர் விஜயராகவன் (உதயநிதி ஸ்டாலின்). அவரது பணி எல்லைக்கு உட்பட்ட சுதந்திரபாளையம் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்த 2 மாணவிகளின் சடலங்கள் தூக்கில் தொங்குகின்றன.
அங்கு சாதிய வன்மமும், ஒடுக்குமுறையும் புரையோடிக் கிடப்பதைக் காணும் விஜயராகவன், மாணவிகள் கொல்லப்பட்டிருப்பதை அறிந்து, குற்றவாளிகளை பிடிக்க விசாரணையை முடுக்குகிறார். அவரை முடக்குவதற்கு ஆதிக்கவாதிகள் அரசியல்அழுத்தம் கொடுக்க, அதையெல்லாம் தாண்டி, மாணவிகள் கொல்லப்பட்ட காரணத்தையும், கொலையாளிகள் யார் என்பதையும் கண்டறிந்து நீதியை எப்படி நிலைநாட்டினார் என்பது கதை.
2019-ல் வெளியான ‘ஆர்ட்டிகிள் 15’ என்கிற இந்தி படத்தை, அதன் ஆன்மாவுக்கு பெரிய சேதாரம் ஏற்படுத்தாமல் மறு ஆக்கம் செய்திருக்கிறார் ‘கனா’ படப் புகழ் அருண்ராஜா காமராஜ்.
மனிதநேயம் மிக்கவர்களின் கையில் சட்டம் இருந்தால், ஒடுக்கப்படுவோர் உட்பட அனைவருக்கும் நியாயம் கிடைக்கும் எனும்செய்தி, வலுவான வசனங்கள் மூலமாக பார்வையாளர்களுக்கு கடத்தப்படுகிறது.
ஐரோப்பாவில் இருந்து வந்துகாவல் அதிகாரியாக பொறுப்பேற்கும் நாயகன் விஜய், சக ஊழியர்களிடம் அவர்கள் எந்தசாதியை சேர்ந்தவர்கள் என்று கேட்கும் காட்சி மிக முக்கியமானது.
ஒரு த்ரில்லர் படமாகவும், வெகுஜன ரசனைக்கு உகந்த வகையிலும் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது படத்துக்கு பலம். இருப்பினும், முதல் பாதியில் தேவைக்கு அதிகமாக நீளும் காட்சிகள், மெதுவாக நகரும் சில காட்சிகள் ரசிகர்களை படுத்துகின்றன.
நாயகனின் நண்பனாக அறிமுகமாகும் வெங்கட் கதாபாத்திரம் (ரமேஷ் திலக்), திடீரென வழக்கை திசைதிருப்பும் முக்கியமான சாட்சியாக மாறும் விதம் இன்னும் தெளிவாக, நம்பகத்தன்மையுடன் சித்தரிக்கப்பட்டிருக்கலாம். டிஎன்ஏ பரிசோதனை காட்சிகளிலும் சிலகுழப்பங்கள் நிலவுகின்றன. தொலைந்துபோன சிறுமி எப்படிதப்பித்தாள், அவள் எப்படி அத்தனை நாட்கள் ஒரு காட்டில் தனியாக இருந்தாள் என்பது குறித்த கேள்விகளுக்கு பதில் இல்லை.
உதயநிதி, நடிப்பில் மாஸ் காட்டாமல், உள்ளடக்கம்தான் மாஸ் என்பதை புரிந்துகொண்டு அலட்டல் இல்லாத நடிப்பை வழங்குகிறார். தேவைப்படும் இடங்களில் அவர் காட்டும் கோபம் அசலாக இருக்கிறது. அவருக்கு அடுத்தஇடத்தில் ஆரியின் நடிப்பு ஈர்க்கிறது. காவல் ஆய்வாளர் கதாபாத்திரத்தை சுரேஷ் சக்ரவரத்தி சிறப்பாக கையாள்கிறார். நாயகி தான்யா ரவிச்சந்திரனுக்கு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரம். துணை கதாபாத்திரங்களில் வரும் இளவரசு, மயில்சாமி, அப்துல் லீ, ராட்சசன் சரவணன், ரமேஷ் திலக் ஆகியோரின் பங்களிப்பு கதைக் களத்தை தாங்கிப் பிடிக்கிறது.
பாதிக்கப்பட்ட சத்துணவு ஊழியருக்கு நியாயம் செய்யும் வகையில் அமைந்துள்ள இறுதிக் காட்சியில், சட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வசனத்துடன் படம்நிறைவடையும்போது, இதுபோன்ற படங்களின் தேவை இன்னும் இங்கு அதிகமாக இருப்பதை ஆழமாக உணர்த்துகிறது ‘நெஞ்சுக்கு நீதி’.