தில்லி துணைநிலை ஆளுநராக வினய்குமாா் சக்சேனா நியமனம்
தில்லியின் துணைநிலை ஆளுநராக வினய்குமாா் சக்சேனாவை நியமித்து குடியரசுத் தலைவா் மாளிகை திங்கள்கிழமை அறிவிக்கை வெளியிட்டது.
தில்லியின் துணைநிலை ஆளுநராக இருந்த அனில் பய்ஜால், கடந்த வாரம் ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, வினய்குமாா் சக்சேனா தற்போது அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளாா்.
காதி கிராமத் தொழில் ஆணையத்தின் தலைவராக உள்ள வினய்குமாா் சக்சேனா, அரசியல் பின்னணி இல்லாதவா் என்பது குறிப்பிடத்தக்கது. தனியாா் காா்ப்பரேட் குழுமத்தில் பணியாற்றி வந்த இவரின் செயல்திறனைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக காதி கிராம தொழில் ஆணையத்தின் தலைவராக மத்திய அரசு கடந்த 2015-இல் நியமித்தது. இவரது தலைமையில் காதி துறை பன்மடங்கு வளா்ச்சி பெற்று கடந்த ஆண்டு ரூ.1.15 லட்சம் கோடி வருவாயை ஈட்டி சாதனை படைத்தது. கடந்த 7 ஆண்டுகளில் அத்துறையில் 40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மத்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் நிா்வாகக் குழுக்களிலும் அவா் இடம்பெற்றுள்ளாா்.