21 ஆவது திருத்தம் கண்துடைப்புத்தான் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி.

அமைச்சரவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட அரசமைப்புக்கான 21 ஆவது திருத்த வரைவு வெறும் கண்துடைப்பு ஏற்பாடுதான் என்று சாரப்பட விசனம் தெரிவித்திருக்கின்றது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்.

நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசமைப்பு சீர்திருத்த அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவால் நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான வரைவில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் முக்கியமான ஏற்பாடுகள் உள்ளடக்கப்படவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான வரைவு தொடர்பில் கவலையும் அதிருப்தியும் தெரிவித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“நீதி அமைச்சரால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான வரைவை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆராய்ந்துள்ளது.

நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்மொழிவுகளுக்கு கடந்த ஏப்ரல்23 ஆம் திகதி சட்டத்தரணிகள் கவுன்ஸில் ஒப்புதல் அளித்திருந்தது.

20ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளை நீக்கி 19ஆவது திருத்தத்தை மீளக்கொண்டு வருவதன் மூலமும் 19ஆவது திருத்தத்தின் கீழ் இருந்த அரசமைப்புப் பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் நிறுவுவதற்கும், அதேவேளை நிதிச் சுதந்திரம், வெளிப் படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வைமேம்படுத்துவதற்கும் அரசமைப்பின் 21ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்துவதற்கு 13 விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்மொழிந்தது.

அரசமைப்புச் சபை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பாக அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் 21ஆவது திருத்தம் மூலம் மீளக்கொண்டுவரப்படும் என்று சட்டத்தரணிகள் சங்கம் கருதியது. ஆனால், இது தொடர்பாக 19 ஆவது திருத்தத்தில் உள்ள முக்கிய ஏற்பாடுகள் 21ஆவது திருத்த வரைவில் உள்ளடக்கப்படவில்லை.

19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் ஜனாதிபதி தனக்கு எந்தவொரு அமைச்சுக்கான விடயதானங்களையும் செயற்பாடுகளையும் ஒதுக்குவதைத் தடுக்கின்றது. ஆனால், 21ஆவது திருத்தம் அத்தகைய தடுப்பு ஏற்பாடுகளை உள்ளடக்கவில்லை. எனவே, ஜனாதிபதி தொடர்ந்தும் அமைச்சுக்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், எந்தவொரு விடயதானங்களையும் செயற்பாடுகளையும் தனக்கு ஒதுக்கிக்கொள்ளவும், எந்தவொரு அமைச்சரின் விடயதானங்களையும் செயற்பாடுகளையும் எடுத்துக்கொள்ளவும் முடியும்.

21ஆவது திருத்தம் அரசமைப்பின் சரத்து 44(2)ஐத் திருத்தும் விதியை உள்ளடக்கியிருக்க வேண்டும். 21ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டவுடன் ஜனாதிபதி அமைச்சுக்களைத் தக்க வைத்துக்கொள்ளும் மற்றும் எந்தவொரு விடயங்கள் அல்லது செயற்பாடுகளையும் தனக்கே ஒதுக்கும் அதிகாரத்தை நீக்கி அத்தகைய ஏற்பாடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பான 19ஆவது திருத்தத்தில் உள்ள ஏற்பாடுகள் மீளமைக்கப்பட வேண்டும்.

மேலும் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்மொழிவுகளில் உள்ள பின்வரும் விடயங்களை 21 ஆவது திருத்தத்தில் சேர்க்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் பரிந்துரைக்கின்றது.

1. நாணயச் சபையின் உறுப்பினர்கள் அரசமைப்புப் பேரவையின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட வேண்டும்.

2. அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண ஆளுநர்கள், வெளிநாட்டுத்தூதுவர்கள் மற்றும் தூதரகத் தலைவர்கள் போன்றோர் அமைச்சரவையுடன் கலந்தாலோசித்து பிரதமரின் ஆலோசனையுடன் நியமிக்கப்பட வேண்டும்.

3. அரசமைப்புச் சபையின் பரிந்துரைக்கமைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சட்ட ரீதியான ஒரு அமைப்பு மூலம் ஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கள் சிபார்சு செய்யப்பட வேண்டும்.

4. நிதி சுதந்திரம், வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகள்.

17ஆவது திருத்தத்தில் காணப்பட்டவாறு அரசமைப்புச் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர்களல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கையை 3இல் இருந்து 5 ஆக அதிகரிக்கவும், மாறாக அரசமைப்புச் சபையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 7 இல் இருந்து 5 ஆகக் குறைக்கவும் சட்டத்தரணிகள் சங்கம் பரிந்துரைக்கின்றது. இது 2015 இல் 19ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்டபோது சட்டத்தரணிகள் சங்கம் எடுத்த நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகின்றது.

அரசமைப்பின் 21ஆவது திருத்தம் இலங்கையில் ஸ்திரத்தன்மையை அடைவதற்கு அவசியமான ஒருபடியாக இருப்பதால் அதை முன்கூட்டியே நிறைவேற்றுவதை உறுதி செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் அரசைக் கேட்டுக்கொள்கின்றது” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.