சுவிசில் அறிமுகமான ‘மனுஷி’
ஊடகவியலாளர் சண் தவராஜா எழுதிய ‘மனுஷி’ சிறுகதைத் தொகுதியின் அறிமுக விழா அண்மையில் சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநகரில் சிறப்பாக நடைபெற்றது.
ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கனகரவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூத்த ஊடகரும், திரைப்பட நடிகரும், சுவிஸ்-லவுசான் மாநகர சபை உறுப்பினருமான தம்பிப்பிள்ளை நமசிவாயம் (ஜெயகாந்த்) வரவேற்புரை நிகழ்த்தினார்.
நூல் அறிமுகவுரையை எழுத்தாளர் கமலினி கதிர் நிகழ்த்த விமர்சன உரையை ஊடகவியலாளரான கவிதாயினி சுகந்தி மூர்த்தி நிகழ்த்தினார்.
நூலின் முதல் பிரதியை சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் பொறுப்பாளர் குலம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் சிறப்பம்சமாக ‘புலம்பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பிலான பேச்சரங்கம் நடைபெற்றது.
இதில் ‘புலம்பெயர் குடும்பத்தில் தமிழ்ப் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் பேர்ண் ஞானலிக்கேச்வரர் ஆலய பிரதம குருவும், உளவள ஆலோசகருமான சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார், ‘புலம்பெயர் பெண்களின் படைப்புலகம்’ என்ற தலைப்பில் கல்வியலாளரும் எழுத்தாளருமான க. அருந்தவராஜா, ‘புலம்பெயர் தமிழர் பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் கவிதாயினி சங்கரி சிவகணேசன், ‘புலம்பெயர் வாழ்வில் பெண்ணடிமைத்தனம் ஒழிந்துவிட்டதா?’ என்ற தலைப்பில் ஊடகவியலாளர் கனகரவி ஆகியோர் உரையாற்றினர்.
திருச்சி இனிய நந்தவனம் பதிப்பாக வெளியான மனுஷி சிறுகதை நூல் சேலம் தமிழ்ச் சங்கம், கம்பம்- பாரதி கலை இலக்கிய மன்றம் ஆகியவை நடத்திய போட்டிகளில் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘மனுஷி’ சிறுகதைத் தொகுதியின் அறிமுக விழாவில் பரத நாட்டிய நிகழ்வும் சிறப்பு அம்சமாக இடம் பெற்றது.