கோட்டாவுக்கு ஒட்சிசன் வழங்கி காப்பாற்றி வருகின்றார் ரணில் – கஜேந்திரகுமார் சாடல்.
“இன்றைக்கோ நாளைக்கோ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலகக் கூடிய சூழல் உருவாகிக் கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவர்களுக்கு ஒட்சிசன் கொடுத்துக் காப்பாற்றுகின்ற வகையில் செயற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.”
இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எந்தவித வெட்கமும் இல்லாமல் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் உதவிகளை வழங்கக் கோரியும் முதலீடுகளைச் செய்யக் கோரியும் கோட்டா – ரணில் அரச தரப்பினர் அழைப்பு விடுக்கின்றனர்.
கடந்த ஆட்சிக்காலத்தில் ஒற்றையாட்சிக்குள் ஒருமித்த நாடு, ஏக்கிய ராஜ்ய என்ற நாடகத்தைக் கூட்டமைப்புடன் இணைந்து நடத்திய ரணில் விக்கிரமசிங்க, தற்போது கோட்டாபய ராஜபக்ச கலைக்கப்பட சந்தர்ப்பங்கள் இருந்தபோது அவரைக் காப்பாற்ற முற்படுகின்றார்.
இந்த அரசால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தமிழர்களினுடைய உதவிகளையே இன்று நாடி இருப்பதன் மூலம் மிகவும் கேவலமான நிலையில் இவர்கள் உள்ளனர் என்பதை அறியலாம். தமிழ் மக்கள் சரியான கோணத்தில் இதனை விளங்கிக்கொண்டு முற்றுமுழுதாக இந்த அரசை நிராகரிக்க வேண்டும்.
ரோம் சாசனத்தில் இலங்கை கையொப்பம் இட்டு, இங்கு நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பொறுப்புக்கூற வைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதனுடாகவும், தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கின்ற சமஷ்டி தீர்வை வழங்கினால் மட்டும்தான் தமிழ் மக்கள் தங்கள் நிலைப்பாடுகளை மாற்ற வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.
சிங்கள மக்களும் இதனை விளங்கிக் கொண்டு, எதிர்காலத்தில் தாங்கள் தெரிவு செய்கின்ற தலைவர்கள் இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும்போது பொருளாதாரத்தை அதனூடாகக் கட்டியெழுப்ப தமிழ் மக்கள் உதவி செய்வார்கள்” – என்றார்.