விஜேதாசவின் 21வது திருத்தச் சட்டமூலம் வாபஸ்!
பாராளுமன்றத்தில் தனிப்பட்ட பிரேரணையாக முன்வைக்கப்பட்ட 21வது திருத்தச் சட்டமூலத்தை அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மீளப்பெற்றுக்கொண்டதாக உச்ச நீதிமன்றில் இன்று தெரியவந்துள்ளது.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் போது, குறித்த சட்டமூலத்தை மீளப் பெறுவதாக சபாநாயகருக்கு திரு விஜேதாச ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு எதிராக தேசிய அமைப்பாளர்கள் ஒன்றியத்தின் அழைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர மற்றும் தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் சட்டத்தரணி நுவான் பல்லந்துடாவ ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
திரு விஜேதாச ராஜபக்ஷ தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையாக பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள தொடர்புடைய வரைவு மூலம் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க முன்மொழிந்திருந்தார்.
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் கடந்த திங்கட்கிழமையன்று அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் மற்றுமொரு வரைவை அமைச்சரவையில் சமர்ப்பித்ததுடன் அதுவும் விஜேதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டது.