21ஐ வெகுவிரைவில் நிறைவேற்ற வேண்டும்! – ரணில் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்.
சட்டமூலத்தை, சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்காத வகையில் – திருத்தங்கள் சகிதம் நாடாளுமன்றத்தில், வெகுவிரைவில் நிறைவேற்றிக்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும், அது தொடர்பில் அரசியல் கட்சிகளின் திருத்தங்கள் மற்றும் யோசனைகளை உள்வாங்குவதற்கும் சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருந்தார்.
இதற்கமைய பிரதம அமைச்சரின் செயலகத்தில் குறித்த கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சுயாதீன அணிகள், 43 ஆம் படையணி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
அமைச்சரவைக் கூட்டம் கடந்த 23 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கூடியபோது, உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலம், நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் முன்வைக்கப்பட்டது. அன்றைய தினம் அச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்படவில்லை.
மாறாக 21 ஆவது திருத்தச் சட்டமூலத்தை, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு வழங்குவதற்கும், அது சம்பந்தமாக கட்சிகளின் திருத்தங்கள் மற்றும் யோசனைகளை உள்வாங்கி, 21 ஐ இறுதிப்படுத்துவதற்கும் முடிவெடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய இன்றைய கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் தமது கட்சிகளின் யோசனைகளை மற்றும் திருத்தங்களை முன்வைத்தனர்.
“19 ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்த ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலேயே 21 அமைய வேண்டும். எனினும், 19 பிளஸ் என்பதற்கு பதிலாக 19 மைனஸ்தான் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை மாற வேண்டும்” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதன்போது வலியுறுத்தினார்.