மிக மிக மோசமான சாதனையை வேதனையுடன் பதிவு செய்த முகமது சிராஜ் !!
15வது ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில், இறுதி போட்டிக்கான இரண்டாவது அணியை தீர்மானிக்கும் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதின.
அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணிக்கு, அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ராஜத் படித்தர் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 58 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், சீனியர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி 157 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சிராஜ் வீசிய போட்டியின் முதல் ஓவரிலேயே 16 ரன்கள் குவித்து அதிரடியாக துவங்கியது. ஜெய்ஸ்வால் 21 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சன் 23 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
இதன்பின் களமிறங்கிய படிக்கல் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், மறுமுனையில் மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜாஸ் பட்லர், பாரபட்சமே பார்க்காமல் பெங்களூர் அணியின் பந்துவீச்சை சிதறடித்து 23 பந்துகளில் அரைசதம் அடித்ததுடன், 59 பந்துகளில் சதமும் கடந்து மொத்தம் 60 பந்துகளில் 106* ரன்கள் குவித்ததன் மூலம் 18.1 ஓவரிலேயே இலக்கை மிக இலகுவாக எட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.
இந்தநிலையில், இந்த போட்டியில் வீசிய இரண்டு ஓவரில் 31 ரன்கள் விட்டுகொடுத்த முகமது சிராஜ், அதில் மூன்று சிக்ஸர்களும் விட்டுகொடுத்தார். இதன் மூலம் ஒரு ஐபிஎல் தொடரில் அதிகமான சிக்ஸர்கள் விட்டுகொடுத்த பந்துவீச்சாளர்கள் வரிசையில் டூவைன் பிராவோவை பின்னுக்கு தள்ளி முகமது சிராஜ் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இதற்கு முன் கடந்த 2018ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டூவைன் பிராவோ 29 சிக்ஸர்கள் விட்டுகொடுத்ததே முதலிடத்தில் இருந்தது, தற்போது இதனை முறியடித்து முகமது சிராஜ் முதலிடத்தை பிடித்து மிக மோசமான வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
அதே போல் இதே போட்டியிலேயே பெங்களூர் அணியின் மற்றொரு வீரரான ஹசரங்காவும் அதிகமான சிக்ஸர்கள் வழங்கிய வீரர்கள் பட்டியலில் 30 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
ஒரே தொடரில் அதிக சிக்ஸர்கள் விட்டுகொடுத்த வீரர்கள் பட்டியல்;
முகமது சிராஜ் – 31 சிக்ஸர்கள் (2022ம் ஆண்டு)
ஹசரங்கா – 30 சிக்ஸர்கள் (2022ம் ஆண்டு)
டூவைன் பிராவோ – 29 சிக்ஸர்கள் (2018ம் ஆண்டு)
யுஸ்வேந்திர சாஹல் – 28 சிக்ஸர்கள் (2015ம் ஆண்டு)
யுஸ்வேந்திர சாஹல் – 27 சிக்ஸர்கள் (2022ம் ஆண்டு)