50 ஆவது நாளில் காலிமுகத்திடல் போராட்டம்.
காலிமுகத்திடல் போராட்டம் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் காலி முகத்திடலை மையமாக கொண்டு பாரிய போராட்டமொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர் என அறிவிக்கப்படுகிறது.
சாதாரண தர மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போராட்டம் நடத்துமாறு போராட்டக்காரர்கள் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு தடை விதித்து நீதிமன்ற உத்தரவு ஒன்று பெறப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் யோர்க் வீதி, பேங்க் வீதி மற்றும் செத்தம் வீதி உட்பட சில வீதிகளுக்கு நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எந்தவொரு அரச நிறுவனத்திற்கோ அல்லது உத்தியோகபூர்வ இல்லத்திற்கோ நுழைந்து சேதப்படுத்துதல் போன்ற எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை,கோட்டாகோகமவில் இன்று (28) இடமபெறும் பேரணிக்கு கறுப்பு ஆடை அணிந்து வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் “கோட்டா கோகம” போராட்டத்துக்கு 50 நாட்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இன்று 28 ஆம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்தும் இன்றைய தினம் காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக இளைஞர்கள் வரவுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று பிற்பகல் 2 மணிக்கு கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து, ஜனாதிபதி செயலகம் வரை கறுப்பு உடை அணிந்து எதிர்ப்புப் பேரணியொன்றயும் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் போராட்டக் களத்தில் பல்வேறு எதிர்ப்பு செயற்பாடுகளில் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கும் மேலதிகமாக இன்றைய தினம் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு நாடு முழுவதும் உள்ள பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.