ஓமந்தூரார் அரசு தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு.. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கயா நாயுடு திறந்து வைக்கிறார்
சென்னை ஓமந்தூரார் அரசு தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கயா நாயுடு இன்று திறந்துவைக்கவுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஏப்ரல் 26ம் தேதி 110 விதியின் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் முக ஸ்டாலின்,நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் உண்டென்றால் அது கருணாநிதி மட்டும்தான். ஐந்து முறை முதலமைச்சராக இருந்து 19 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி. 13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து 60 ஆண்டுகள் மாமன்றத்தில் இருந்தவர் கருணாநிதி.
கருணாநிதி பிறந்த ஜூன் 3ம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும். மேலும் சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும்’ என்று அறிவித்தார். அதன்படி ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் சிலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ளது போன்றே இந்த சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் சிற்பி தீனதயாளன் இந்த சிலையை வடிவமைத்துள்ளார். ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த சிலையை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கயா நாயுடு இன்று மாலை 5:30 மணியளவில் திறந்து வைக்கவுள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் வரவேற்பு உரை ஆற்றுகிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என முக்கிய பிரமுகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.