பொருளாதார நெருக்கடி நிலையை ரணிலால் வெற்றிகொள்ள முடியும்! – அமெரிக்கா நம்பிக்கை.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ,சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசால் முடியும் எனத் தான் நம்புவதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.
அதேபோன்று மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொண்டு ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கை – ஐக்கிய அமெரிக்க நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் ஊடாக இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜூலி சங் தெரிவித்தார்.
நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மேற்கொள்ளும் பணிகளைப் பாராட்டிய அவர், நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் அவசியம் குறித்தும் கலந்துரையாடினார்.
இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்படுத்த ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்தும் வழங்கிவரும் பங்களிப்புக்குச் சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
ஜூலி சங், இந்நாட்டுக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டதை அடுத்து சபாநாயகருடன் இடம்பெற்ற முதலாவது சந்திப்பு இதுவாகும்.