2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-வங்காளதேச ரெயில் சேவை தொடக்கம்.
இந்தியா-வங்காளதேசம் இடையிலான பயணிகள் ரெயில் சேவை, கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான ரெயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது. கொல்கத்தா ரெயில் நிலையத்தில் இருந்து வங்காளதேசத்தின் குல்னாவுக்கு பந்தன் விரைவு ரெயில் காலை 7.10 மணிக்கு கொடியசைத்து துவக்கிவைக்கப்பட்டது.
கொல்கத்தா-டாக்கா இடையிலான மைத்ரி விரைவு ரெயில் சேவையும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முதல் தொடங்கியது. கொல்கத்தா-குல்னா பந்தன் விரைவு ரெயில், வாரத்தில் 2 நாட்களும், கொல்கத்தா-டாக்கா மைத்ரி விரைவு ரெயில் வாரத்தில் 5 நாட்களும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-வங்காளதேசம் இடையிலான ரெயில் இணைப்பை அதிகரிக்கும்விதமாக வருகிற ஜூன் 1-ந் தேதி முதல் மேற்கு வங்காளத்தின் புது ஜல்பைல்குரியில் இருந்து டாக்காவுக்கு மித்தாலி எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கிழக்கு ரெயில்வே அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்தனர்.