கோட்டா பதவி விலகினால் பஸில் ஜனாதிபதியாவார்! தற்போதைய நிலைமை இதுவே; நீதி அமைச்சர் விஜயதாஸ அச்சம்.
“நாடாளுமன்றத்தில் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வசமே பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால் பஸில் ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவாகக்கூடும்.”
– இவ்வாறு அச்சம் வெளியிட்டார் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.
“தற்போதைய சூழ்நிலையில், சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல முடியாது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டுமானால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த நேரிடும். எனவே, அதற்கு வழிவகுக்காத வகையிலேயே அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, 21 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால், அடுத்த ஜனாதிபதியை நாடாளுமன்றம் தெரிவுசெய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வசமே பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே, அடுத்த ஜனாதிபதி குறித்த ஐயப்பாடு உள்ளது. பஸில் ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவாகக்கூடும்.”
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டுமானால் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல நேரிடும். எனவே, 21 ஐ ஆரம்பப் புள்ளியாகக் கருதலாம்.
இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்படுவதற்குத் தடை விதிக்கப்படும். இது தொடர்பில் அழுத்தங்கள் வருகின்றன. எனினும், கொள்கை ரீதியில் எடுக்கப்பட்ட முடிவு மாறாது. அந்த நபர்தான் பொருளாதாரத்தைச் சீரழித்தார். தனது சகோதரராக இருந்தால்கூட அவரை அமைச்சுப் பதவியில் இருந்து ஜனாதிபதி நீக்கினார்” – என்றார்.