தமிழக முதல்வரது உதவி வடக்கு மாகாணத்திற்கு போதுமானதாக வழங்கப்படவில்லை : லக்ஷயன் முத்துக்குமாரசாமி
தமிழக மக்கள் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் பகிர்ந்தளிப்பதில் போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வடக்கு மாவட்டங்களாகிய முல்லைத்தீவு மாவட்டம் , வவுனியா மாவட்டம் மற்றும் மன்னார் மாவட்டம் ஆகியவற்றுக்கு வழமை போன்று அரசாங்கத்தினால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது . மன்னார் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு ஒப்பீட்டளவில் சிறியளவு பொதிகளே ஒதுக்கப்பட்டுள்ளன என்பது கண்டிக்கத்தக்க செயற்பாடாகும்.
மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் தமது வாழ்வாதாரமாக விவசாயம் , மீன்பிடித் தொழில்களைக் கொண்ட வறிய மக்கள் வாழும் மாவட்டமாகும்.
உரத்தட்டுப்பாட்டினாலும் எரிபொருள் தட்டுப்பாட்டினாலும் பாதிக்கப்பட்டு பொருளாதாரரீதியிலான நெருக்குவாரங்களைச் சந்திக்கும் இந்த மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு வழமையான புறக்கணிப்பினை இந்த அரசாங்கம் செய்திருப்பதானது கண்டிக்கத்தக்கது .
இலங்கையில் அதிக பெண் தலைமைத்துவ குடும்பங்களையும்அங்கவீனமுற்றவர்களையும் கொண்ட எமது மாவட்டங்களுக்கு உடனடியாக அதிக நிவாரணப் பொதிகளை அவதியுறும் மக்களுக்கு வழங்கி அவர்களின் பொருளாதாரப் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்று கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிக்க இந்திய அரசும் தமிழக முதல்வரும் முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம் என முல்லைத்தீவு மாவட்ட , ஐக்கிய மக்கள் சக்தி பிரதான அமைப்பாளர் லக்ஷயன் முத்துக்குமாரசாமி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் இவ் நிவாரணப் பொதிகள் இன மத அரசியல் பேதம் இ்ன்றி அனைத்து மக்களுக்கும் சமனாக பகிர்ந்தளிக்கச் செய்வதே எமது கோரிக்கையாகும் எனவும் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார் .