நாடெங்கும் இன்று தொடக்கம் எரிவாயு சிலிண்டர் விநியோகம்.
நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர் விநியோக நடவடிக்கை இன்று பிற்பகல் முதல் முன்னெடுக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம் மற்றும் 2 தசம் 3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தையில் விநியோகிக்கப்படவுள்ளன என்று குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், 3 ஆயிரத்து 950 மெற்றிக் டொன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளது.
இதன்படி, தர பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு குறித்த எரிபொருள் தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், நாடளாவிய ரீதியில் இன்று முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரை நாளாந்தம் 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளன என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு விநியோகிக்கப்படவுள்ள எரிவாயு சிலிண்டர்களில் 60 வீதமானவை கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன எனவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, வார இறுதியில் 2 ஆயிரத்து 500 மெற்றுக் டொன் எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது எனவும் லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.