’21’ மூலம் ‘கப்புடா’ பஸிலை வெளியேற்றியே தீருவோம் – கம்மன்பில சூளுரை.
“கப்புடா பஸில் நிதி அமைச்சராக இருந்தபோதுகூட நாம் அஞ்சவில்லை. தற்போது அவர் சாதாரண பஸில். நாடாளுமன்றத்தில் அவருக்குப் பெரும்பான்மை பலம் இருந்தாலும் அரசமைப்பின் 21ஆவது திருத்தத்தின் ஊடாக அவரை வெளியேற்றுவோம்” என்று புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“21 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக பஸில் ராஜபக்சவை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றி, நாட்டையும் நாடாளுமன்றத்தையும் பஸிலிடமிருந்து பாதுகாப்போம்.
நாடாளுமன்ற அதிகாரம் பஸிலிடம் இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், 21ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து, இரட்டைக் குடியுரிம கொண்ட பஸில் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றுவோம்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்கிற நம்பிக்கை எமக்கில்லை. ஆனாலும், நாடு குழியில் விழுந்துள்ளது. எனவே, இப்போது கட்சி அரசியலை ஒருபுறம் வைத்துவிட்டு நாட்டைக் குழியிலிருந்து மீட்க வேண்டும்.
‘கோட்டா கோ கம’, ‘ரணில் கோ கம’ என்பற்றை ஒருபுறம் வைத்துவிட்டு, நாட்டைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பின்னர் விரைவாகத் தேர்தலுக்கு செல்ல வேண்டும். தேர்தல் ஒன்று நடந்தால் யார் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்” – என்றார்.