பிறந்தநாள் விருந்தில் சோகம்.. கொலையில் முடிந்த கொண்டாட்டம்..

திருவள்ளூர் மாவட்டத்தில் பிறந்தநாளுக்கு விருந்து வைத்த நண்பரை சக நண்பர்கள் சேர்ந்து அடித்துக்கொன்ற பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. பிறந்தநாள் விழா கொலையில் முடிந்தது எப்படி?
மதுபோதையில் உச்சம் பெற்ற பிறந்த நாள் கொண்டாட்டம் 20 வயதான மாரியின் உயிரை பறித்துள்ளது. கொண்டாட்டம் கொலையில் முடிந்தது எப்படி?
சென்னை செங்குன்றத்தை அடுத்த அலமாதி கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் 20 வயதான மாரி. பள்ளிப்படிப்பை முடித்தவர் எலக்ட்ரிசனாக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே, திங்கள் கிழமை இவருக்கு பிறந்தநாள். நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டவர் கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள மைதானத்தில் கூடியுள்ளனர்.
மைதானத்தில் நண்பர்கள் ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகியோருக்கு மாரி மது விருந்து வைத்துள்ளார். மாரிக்கு கேக் வாங்கி வந்த நண்பர்கள் அவரை கேக் வெட்ட வைத்துள்ளனர். மாரி கேக் வெட்டியதும் கேக்கை எடுத்து அவர் முகத்தில் பூசிய நண்பர்கள் விளையாட்டாக அவர் தலையில் தாக்கியுள்ளனர்.
அப்போது திடீரென மாரி மயங்கிவிழுந்துள்ளார். தட்டி எழுப்பியும் மாரி எழாததால் அதிர்ச்சியடைந்த நண்பர்களை மாரியை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சோழவரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்
தொடர்ந்து, விசாரணையை தொடங்கிய போலீசார் உடன் வந்த நண்பர்களை லோகேஸ்வரன் மற்றும் ராம மூர்த்தியை பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மதுபோதையில்
விளையாட்டாக நினைத்து செய்தது கொலையில் முடிந்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, லோகேஸ்வரன் மற்றும் ராம மூர்த்தியை கொலை வழக்கில் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.