கமல் படத்தின் முதல் காட்சியை பார்க்க விருப்படும் எதிர்க்கட்சி தலைவர்.
விக்ரம் படம் திரைப்படம் 3ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், மலேசியா எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம்மை, கமல்ஹாசன் சந்தித்து பேசியுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘விக்ரம்’. கமல்ஹாசனால் ஈர்க்கப்பட்டு சினிமாத்துறைக்குள் வந்த லோகேஷ் கனகராஜ் தனது நான்காவது படத்திலேயே கமல்ஹாசனை இயக்கியுள்ளார். பான் இந்தியா திரைப்படமான ‘விக்ரம்’ ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கமல்ஹாசன் காதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
‘விக்ரம்’ படத்திற்கான புரமோஷனுக்காக கமல்ஹாசன் பல இடங்களுக்கு பறந்து கொண்டிருக்கிறார். அதன்படி, மலேசியாவிற்கு புரமோஷனுக்காக சென்ற கமல், மலேசியா எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமை சந்தித்து பேசியுள்ளார். கமலை சந்தித்தது குறித்து மலேசியா எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், ” சூப்பர் ஸ்டார் கமல்ஹாசனை நான் சந்தித்தேன். எங்கள் இருவருக்குள்ளும் இந்திய வரலாறு மற்றும் நல்லாட்சி குறித்து நீளமான விவாதம் நடந்தது. மலேசியா தலைநகரில் ஜூன் 3-ஆம் தேதி வெளியாகும் ‘விக்ரம்’ படத்தின் முதல் காட்சியில் நான் கலந்து கொள்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.