துமிந்த சில்வாவுக்கு வலிப்பு : ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதி
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வலிப்பு (பிட் ஒன்) நோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாரத லக்ஷ்மன் கொலையானதும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வாவிற்கு சிகிச்சை அளித்த , அதே விசேட வைத்தியர் டொக்டர் மஹேஷி விஜேரத்னவே இம்முறையும் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி அவர் தற்போது ஜயவர்தனபுர வைத்தியசாலையின் 18வது வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். மே 07 அன்று நாடு முழுவதும் ஏற்பட்ட போராட்ட அலையால் துமிந்த சில்வா வெளிநாட்டுக்கு சென்று இருந்தார்.
எவ்வாறாயினும், அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடு திரும்பியிருந்த நிலையில், நேற்று (31) வழங்கப்பட்ட தீர்ப்புடன், அவரை உடனடியாக கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.