நேஷனல் ஹெரால்டு விவகாரம்: நேரில் ஆஜராக சோனியா, ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன்

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் நேரில் ஆஜராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, அவருடைய மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோா் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ அமைப்பு, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கடந்த 2010-இல் விலைக்கு வாங்கியது. இதில் மிகப் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜகவைச் சோ்ந்த சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்த பண மோசடி தொடா்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில், நேரில் ஆஜராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அதன்படி ராகுல் காந்தி நாளையும், சோனியா காந்தி வருகிற ஜூன் 8 ஆம் தேதியும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஏற்கனவே, காங்கிரஸ் தலைவர் பவன்குமார் பன்சால் உள்ளிட்டோரிடம் இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.